Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வேல்பூஜை எதற்கு? முருகன் மீது பக்தியா? நோட்டாவை முந்த எடுத்த பிரம்மாஸ்திரமா?

0 Comments

Published on: Wednesday, August 12th, 2020 at 10:11 PM

வேல்பூஜை எதற்கு? முருகன் மீது பக்தியா? நோட்டாவை முந்த எடுத்த பிரம்மாஸ்திரமா?

கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் இழிவுபடுத்தியதை அடுத்து, முருகனை கையில் எடுத்த பாஜகவினர், இன்று வரை அதை முன்னிறுத்தியே அரசியல் செய்து வருவதால், இது வரும் சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவை முந்துவதற்கு எடுத்துள்ள பிரம்மாஸ்திரம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அதிமுக, திமுக உள்பட பல கட்சிகளும் கறுப்பர் கூட்டத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. ஆனால், பாஜகவினரோ திமுக கருத்து தெரிவிக்கவில்லை. இந்துக்களுக்கு எதிரான கட்சி என தொடர்ந்து அரசியல் செய்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, திமுகவின் கண்டனத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்.

அத்துடன் திமுகவில் இருக்கும் தொண்டர்களில் ஒரு கோடி பேர் இந்துக்கள் என்று விளக்கம் அளித்ததோடு, திருவாரூர் தேர் முதல் திருச்செந்தூர் கோயில் வரை திமுக ஆட்சியின்போது செய்யப்பட்ட ஆன்மிக நற்பணிகளையும் பட்டியலிட்டார். அப்போது, திமுக மீது குற்றஞ்சாட்டுவதிலேயே குறியாக இருந்த பாஜகவினர், ஸ்டாலின் ஏன் விளக்கம் அளிக்கவில்லை என எதிர்கேள்வி கேட்டனர். அதற்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் விளக்கம் அளித்த ஆ.ராசா, திமுகவில் இருந்து யார் சொன்னாலும், அது தலைமையில் கருத்துதான் என்றும், மற்ற கட்சிகளைப் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி திமுகவினர் பேசுவதில்லை என்றும் கூறி எதிர் தரப்பினரின் வாயை அடைத்தார்.

இதனிடையே, முருகனை விடாப்பிடியாக கையில் வைத்துக் கொண்ட பாஜக, வேல் பூஜைக்கு தமிழகம் முழுவதிலும் அழைப்பு விடுத்தது. இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட பங்கேற்று, கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை துதித்த நிலையில், பாஜகவினர் செய்த செயல்கள்தான், முருக பக்தர்களின் முகத்தை சுழிக்க வைத்தது.

வேல்பூஜைக்கு அழைப்பு விடுத்த பாஜகவினர் பலர், தங்களது பூஜை அறைகளில் முருகனை வைத்து வழிபடவில்லை. ஆயுத பூஜை, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், ராமர் குறித்த சர்ச்சை எழுந்தபோதும், பாஜகவினர் தங்களது பூஜை அறையில் இருந்த கடவுளர்கள் படங்களை வணங்கியவாறு எடுத்த புகைப்படங்களைத் தான் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். ஆனால், முருகன் விசயத்தில் அது மிஸ்ஸிங்.

அரசியலுக்காகத் தான் வேல் பூஜை என்பதையும், முருகனை இதுவரை தாங்கள் வணங்கியதில்லை என்பதையும் நிரூபிக்கும் வகையில், மூத்த பாஜக தலைவர்கள் பலர் காலண்டர்களில் இந்த முருகன் படங்களையும், புதிதாக அச்சடிக்கப்பட்ட பிளக்ஸ்-களையும் வைத்தே வணங்கி, அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். பாரம்பரியமாக முருகனை வணங்கும் அடிமட்ட பாஜக தொண்டர்கள் மட்டுமே பிரேம் போட்ட புகைப்படங்களை வைத்திருந்தனர்.

சரி, மூத்த பாஜக தலைவர்கள் வீடுகளில் பிரேம் போட்ட ஒரு முருகன் படம் கூட இல்லை. அதனால் அவசரத்துக்கு காலண்டர், பிளக்ஸ் புகைப்படங்களை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட, தங்களது பூஜை அறைகளில் முருகனுக்கு இடம் தராமல், ஹால், வீட்டின் முற்றம், வாசல் அல்லது தெருவோரங்களில் தான் முருகனை படத்தை வைத்து வழிபட்டனர். அதிலும் ஒருவர் சமையலறையில் முருகன் படத்தை வைத்து வழிபட்டு, அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டதுதான் நகைச்சுவை என சமூகவலைதளவாசிகள் இன்று கலாய்த்து வருகின்றனர்.

மேலும், முருகனுக்கான வேலை சிலர் அட்டையில் செய்திருந்தாலும், மூத்த பாஜக தலைவர் ஒருவர், ஒட்டடை அடிக்கும் குச்சியில் வேல் தயாரித்து வைத்திருந்ததும் உண்மையான முருக பக்தர்களுக்கு வேதனைதான். இந்நிலையில், பாஜகவின் வேல்பூஜை, கந்த சஷ்டி கவச உச்சரிப்பு என அனைத்தும் வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடத்தப்படும் நாடகம் என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, நோட்டாவை முந்தாமலும், டெபாசிட் வாங்காமலும் தோல்வி அடைந்துள்ளது. இப்போதும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படும் சூழல் இருக்கும் நிலையில், தனித்துப் போட்டியிட்டால் மண்ணை கவ்வுவது உறுதி என்பது பாஜகவினருக்கு தெரிந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும், வேல் பூஜை என்றால், தைப்பூசத்திற்கு அலகு குத்தி, பால் குடம் எடுத்து வழிபடுவதுதான் எனக் கூறும் முருகன் வழிபாட்டாளர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் அதைப் போல முருகனை வணங்கினால், அவர்களோடு நாமும் வேல் பூஜை செய்யலாம் என தெரிவிக்கின்றனர்.

ராமரை வைத்து இதுவரை தமிழகத்தில் பாஜகவினர் செய்த அரசியல் எடுபடவில்லை என்பதால், தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் வணங்கும் கடவுளான முருகனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதாக கூறும் நடுநிலையாளர்கள், ஆனால், பாஜகவினர் நடத்திய வேல் பூஜை மூலமாகவே, அவர்களது அரசியல் தமிழக மக்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

சரி, சட்டமன்றத் தேர்தல் நடந்து, முடிவுகள் வரட்டும்… தமிழக மக்கள் எந்த அரசியலை புரிந்து வைத்துள்ளார்கள் என்பது தெரிந்து விடும்… கந்தனுக்கு அரோகரா…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet