Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

என்ன செய்கிறீர் அமைச்சரே? மும்முனை தாக்குதல் சரிதானா? – சிறப்புக் கட்டுரை…

2 Comments

Published on: Friday, June 5th, 2020 at 10:55 AM

என்ன செய்கிறீர் அமைச்சரே? மும்முனை தாக்குதல் சரிதானா?

கோவிட்-19ஐ கட்டுப்படுத்த முடியாமல் அல்லது தெரியாமல் தமிழக அரசு திணறுகிறது. தலைநகரில், கோவிட்-19இன் ஆட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள் நோய்த்தொற்று வீரியத்தை தாங்கமுடியாமல் தவிக்கின்றன. கோவிட்-19 சமூகப் பரவலாக மாறிவிட்டதா? என கேள்வி எழுப்பினால், கொரோனா சமூகத்தில் பரவியுள்ளது, ஆனால், சமூகப் பரவல் இல்லை என்று விநோதமாக விளக்கம் அளிக்கிறது தமிழக அரசு. அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், கோவிட்-19 சமூகப் பரவலாக மாறி பல வாரங்கள் ஆகிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த சுகாதார நெருக்கடிக்கு மத்தியில்தான், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே தீருவோம் என பிடிவாதமாக இருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் பல நிலைகளில் கணக்கில் கொள்ளப்படுவதால், தேர்வை நடத்தியாக வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.  ஆனால், கோவிட்-19இன் கோரத்தாண்டவம் அடங்கியபிறகு அல்லது பெருமளவு குறைந்தபிறகு நடத்தலாமே என்பதுதான் கல்வியாளர்களின் ஆதங்கமாக உள்ளது.

தமிழக அரசு வரும் 15-ந் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவித்து அதற்கான வேலைகளை செய்துவருகிறது. அதேநேரம், பல்வேறு கேள்விகளுக்கு அரசு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  மூன்று மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், நேரடியாக தேர்வு மையத்துக்கு அழைத்து, தேர்வை எதிர்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவது, அவர்களை மனதளவில் பாதிக்காதா? ஆண்டு முழுவதும் முறையாக வகுப்புகள் நடைபெற்று வந்தபோது, பொதுத்தேர்வுக்கு முன்னர் ரிவிஷன் டெஸ்ட் எனப்படும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். தற்போது அந்த திருப்புதல் தேர்வுகள் தவிர்க்கப்பட்டு, நேரடியாக பொதுத்தேர்வுக்கு வருமாறு மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படும் நிலையில், கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வுகள் தேவையற்றதாக ஆகிவிட்டதா?

பதின் பருவத்தை தாண்டிய கல்லூரி மாணவர்களுக்கு, உயர்கல்வித்துறை எந்த வித மன அழுத்தத்தையும் கொடுக்காத நிலையில், பத்தாம் வகுப்பு பயிலும் சிறார்களை மனரீதியாக நசுக்கி, கட்டாயப்படுத்தி, ஏன் அவசர அவசரமாக தேர்வை நடத்த வேண்டும்? ஜுன் 1ஆம் தேதி தேர்வு என அமைச்சர் முதலில் அறிவித்த நிலையில், மன ரீதியாத மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொண்டனர். பின்னர் 15-ம் தேதிக்கு அமைச்சர் தேர்வை தள்ளிவைத்தார். அப்படியானால், ஜுன் ஒன்றாம் தேதியோடு ஒப்பிடும்போது, நோய்த்தொற்று தற்போது கட்டுக்குள் வந்துவிட்டதா?

தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் நடத்தி, பல திருப்புதல் தேர்வை நடத்தி முடித்துள்ளனர். ஆனால், தனியார் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் கதி என்ன? கோவிட்-19 தொற்றியிருக்கும் மாணவர், தொற்று பாதித்து குணமடைந்த மாணவர் தேர்வெழுத, அரசு என்ன வழிமுறை வகுத்துள்ளது? ஆரோக்கியம் குன்றி உட்காரக் கூட முடியாத மாணவர்களை அரசு எப்படி தேர்வெழுத வைக்கப்போகிறது?

கோவிட்-19 தொற்றுள்ள மாணவரை தேவையான முன்னேற்பாடுகளுடன் தேர்வெழுத வைக்கும் பட்சத்தில், அந்த மாணவரை கண்காணிப்பது யார்?, அந்த மாணவரிடம் இருந்து விடைத்தாளை வாங்குவது யார்? தொற்று பாதித்த மாணவருக்கு இப்போது தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு தரப்பட்டால், எப்போது அந்த மாணவருக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும்?

தமிழகத்தில், கோவிட்-19 தொற்று புள்ளிவிவரப்படி பார்த்தால், சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மட்டுமே 80 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மொத்த மாணவர்களில், சுமார் 25 சதவிகிதத்துக்கும் அதிகமானோர்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்ளைச் சேர்ந்தவர்கள்தான். எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டால், இது, சற்றேறக்குறைய 2 லட்சம் ஆகும்.

தற்போது, Asymptomatic ஆக, அதாவது, அறிகுறி இல்லாமல் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், சென்னையில் Containment Zone எனப்படும் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தேர்வு எவ்வாறு நடத்தப்பட இருக்கிறது? அறிகுறி இல்லாமல் தொற்று வேகமாக பரவும் நிலையில், ஏதாவது ஒரு மாணவர் மூலம், பல மாணவர்களும், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் நோய்த் தொற்றை பெற்றால், பள்ளிக் கல்வித்துறை அதற்கு பொறுப்பேற்குமா?

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், கோவிட்-19 எளிதாக தொற்றும் நிலையில், தேர்வெழுத உள்ள அத்தனை மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இருப்பதை அரசு எப்படி உறுதி செய்யப்போகிறது? படிக்கும் பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றால், அந்தப் பள்ளிகள் தேர்வு மையத்துக்கு தகுதியானவைதான் என்பது உறுதியாகிறது. அப்படியானால், வரும் ஆண்டுகளிலும், மாணவர்கள் தங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வெழுத அரசு அனுமதிக்குமா?

அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகளை திறப்பதற்கான தேதியே முடிவு செய்யப்படாத நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே தீருவோம் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பிடிவாதம், மும்முனை தாக்குதலாக இருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என மூன்று தரப்பின் மீதும் அமைச்சர் உளவியல் தாக்குதல் நடத்துகிறார். மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுத முடியாது, ஆசிரியர்கள் அச்சமின்றி தேர்வுப் பணிகளில் ஈடுபட முடியாது, பிள்ளைகளை தேர்வறைக்கு அனுப்பிவிட்டு, பெற்றோரால் தவிப்பின்றி இருக்க முடியாது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க தேர்வை தள்ளிவைப்பதால், என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது.

அனைத்து கேள்விகளுக்கும் விடையை வைத்துக்கொண்டுதான், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடக்கிறது என்றால், அமைச்சர்  அதை வெளிப்படையாக அறிவிக்கலாமே! அறிவை வளர்க்க உதவாத, மதிப்பெண் முறையிலான கல்வி முறை தவறு என்ற குரல் வலுவாக ஒலிக்கும் நிலையில், தங்களின் பிடிவாதம், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மீது மட்டுமின்றி, சமூகத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்தல் சிறப்பு அமைச்சரே!

 -“வேல்ஸ் மீடியா” கோபி, பத்திரிகையாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2COMMENTS