Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

“செய்வோம் இயற்கை விவசாயம்” – புத்தம் புதிய தொடர் – பகுதி 1

0 Comments

Published on: Monday, May 11th, 2020 at 7:59 PM

செய்வோம் இயற்கை விவசாயம் – புத்தம் புதிய தொடர் – பகுதி 1

விவசாயம்இந்த ஒற்றை வார்த்தையில் உலகமே அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். விலங்குகளை வேட்டையாடி, உணவைத் தேடி நாடோடியாய் காடு, மேடெல்லாம் திரிந்த மனிதன், மெசபடோமியாவிற்கு வந்தபின்தான் நதிநீரை பயன்படுத்தி பயிர்களை எவ்வாறு சாகுபடி செய்வது என்பதைக் கற்றுக்கொண்டான். அங்கிருந்து மனிதனின் விவசாயம் தொடங்குகிறதுஅதே நேரத்தில் நாகரீகமும் தோன்றுகிறது. நகரம் உருவாகிறது.

ஆனால் இன்றைய சூழலில் விவசாயம் செய்வது நாகரீகம் இல்லை என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஆதலால், விவசாயத்தை கைவிட்டு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். கிராமங்களில் விவசாயம் செய்து பெருமையாக திரிந்த மனிதர்கள், நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் வாசல்களில் காவலாளிகளாக காத்திருக்கிறார்கள் வாழ்வுக்காக.

இதற்கு காரணம்பசுமைப்புரட்சிதான். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து வேளாண் உற்பத்தி கடும் சரிவை சந்தித்து வந்தது. பருவமழை பொய்த்ததால், அப்போது இருந்த சுமார் 35 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை தேவைக்கேற்ப கொடுக்க முடியவில்லை. 70 சதவீத மக்கள் விவசாயம் செய்தாலும், உணவுப் பஞ்சத்தை சரிசெய்ய முடியவில்லை. தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும் இந்திய மக்களின் தேவை பூர்த்தி அடையவில்லை.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தானியங்களும், மாவு வகைகளும் குறைந்த அளவே மக்களுக்கு ரேஷன் முறையில் விநியோகம் செய்யப்பட்டது. அதிகாரத்தையோ, பணத்தையோ பயன்படுத்தி யாரும் கூடுதல் சலுகை பெறமுடியவில்லை. இதை சரிகட்ட இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் மத்திய வேளாண் அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் வெளிநாடு சென்றிருந்தபோது ரசாயனமுறை விவசாயம் குறித்து கேள்விப்படுகிறார். அதை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தலாம் என்று எண்ணம் தோன்றியது. தாய்நாடு திரும்பிய அவர், வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனுடன் ஆலோசனை மேற்கொண்டு, பசுமைப் புரட்சி என்ற திட்டத்தை வடிவமைக்கிறார்கள்.

எம்.எஸ்.சுவாமிநாதன் – சி.சுப்பிரமணியம்

1966ம் ஆண்டுகளில் இந்தியாவில் பசுமைப்புரட்சி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது வரை கோடை உழவு செய்து, மாட்டுச் சாணங்களையும், குப்பைகளையும் நிலத்திற்கு உரமாக இட்டு பயிர் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளின் கைகளில் யூரியா, பொட்டாஷ் போன்ற ரசாயன உரங்களை அரசு திணித்தது. யூரியாவை பயன்படுத்த மறுத்த விவசாயிகளின் நிலங்களில் வேளாண் அலுவலர்களை கொண்டு, இரவு நேரத்தில் ரசாயன உரங்களை தூவ வைத்தது அரசு. இதன் பயனாக உணவு உற்பத்தி அதிகரித்து, தேவைகள் நிறைவடைந்தன. அதுவரை குறைந்த அளவு லாபம் மட்டுமே பெற்றுவந்த விவசாயிகளுக்கு, அதிக விளைச்சலின் காரணமாக வருமானம் அதிகரித்தது.

உணவுத் தேவையும் பூர்த்தியடைந்து, வருமானமும் பெருகியதை கண்ட விவசாயிகள், இயற்கை உரங்களையும், பாரம்பரிய தொழில்நுட்பங்களையும் மெல்ல மறக்கத் தொடங்கினர். விளைவு, பூச்சி, நோய்களின் பெருக்கம் அதிகரித்தது.

பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளைப் பயன்படுத்த தொடங்கிய விவசாயிகள், லாபத்தில் பெரும்பங்கை தொடர்ந்து இழக்கத்தொடங்கினர். உற்பத்தியைப் பெருக்கி, வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ரசாயன உரங்களை கூடுதலாக பயன்படுத்தினார்கள். ஆனால் அவர்களை அறியாமலே இன்று மண் மலடாக மாறிவிட்டது. இனி, எத்தனை டன் ரசாயன உரங்களைப் பயன்படுத்தினாலும், எத்தனை வகையான பூச்சி, நோய் மருந்துகளைப் பயன்படுத்தினாலும் விளைச்சலை அதிகரிக்க முடியாது என்ற உண்மையை அறியாத பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், வீடு, நிலம் அத்தனையையும் விற்று, வாங்கிய கடன்களை கட்டிவிட்டு, இருக்கும் கொஞ்சம் கடனையும், வாழ்க்கையையும் கழிப்பதற்காக நகரங்களில் தஞ்சமடைய தொடங்கியுள்ளனர்.

இந்தியா பஞ்சத்தில் வாடியபோது, மருந்துபோல பசுமைப்புரட்சி என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய அரசு, பஞ்சம் எனும் நோய் வாடிய பின், பசுமைப்புரட்சி என்ற மருந்தை தடை செய்ய மறந்துபோனது. அதன் விளைவாக கெட்டது மண் மட்டுமல்லமனிதனும்தான்.

 வைரம் பாய்ந்த மரம்போல், 100 ஆண்டுகளைத் தாண்டி வாழ்ந்த மனிதன், இன்று சர்க்கரை, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு என நூற்றுக்கணக்கான நோய்களால் அரை சதம் அடிக்கும் முன் ரன்அவுட் ஆகிப்போகிறான். இது அத்தனையும் ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்ட பொருட்களின் பரிசுதான்.

இனியாவது விழித்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை விவசாயிகள் உணர்ந்து, சூழலுக்கு ஏற்ற விவசாயத்தையும், மண்ணுக்கேற்ற தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் முயற்சி மேற்கொண்டு வந்தாலும், அது முழு பலனை தரவில்லை. காரணம், இயற்கை விவசாயத்தில் வருமானம் குறைவு என்ற விவசாயிகளின் மனநிலையே.

ரசாயன விவசாயத்தை விட, இயற்கை விவசாயத்தில் மகசூலும், அதனால் கிடைக்கும் வருமானமும் குறைவுதான் என்றாலும், உண்மையைச் சொன்னால் லாபம் அதிகம். இதை  விவசாயிகள் உணர வேண்டும். நாம் எப்போதுமே விவசாயத்தில் மேற்கொள்ளும் செலவுகளை கணக்கிடுவதில்லை. மகசூலையும், அதனால் கிடைக்கும் வருமானத்தையும் மட்டும் கணக்கிட்டு, நல்ல விளைச்சல் என்று மனநிறைவு அடைகிறோம். உண்மையில் செலவு செய்த தொகையை விட வருமானம் குறைவாக இருக்கும். இதை அறியாமல் நாம் தொடர்ந்து செய்யும் விவசாயத்தால் தான், பூர்வீக நிலங்களையும், சொத்துகளையும் இழக்க நேரிடுகிறது.

இயற்கை முறையில் சாகுபடி செய்தபோது செலவுகள் குறைவாக இருந்தன. மாட்டுச் சாணமும், குப்பையும், மட்குகள் நிறைந்த ஆறு மற்றும் குளத்து வண்டல் மண்ணுமே பயிருக்கு உரமாகிப் போனது. வேப்பிலைக் கரைசலும், மூலிகைக் கரைசல்களும் பூச்சி, நோய்களுக்கு தீர்வை தந்தன. மகசூல் குறைவாக இருந்தாலும் லாபம் அதிகமாகத்தான் இருந்தது.

ரசாயன முறையில், உழவு செய்யும்போது இடும் ஜிப்சம் முதற்கொண்டு, யூரியா, பொட்டாஷ் என உரங்களின் வரிசை, பெருமளவு பணத்தை செலவிட வைக்கிறது. இயற்கை எதிரிகள் என்றழைக்கப்படும் நன்மை செய்யும் பூச்சிகளின் அழிவால், எண்டோசல்பான் எனத் தொடங்கி, என்னென்னமோ பூச்சி, நோய் மருந்துகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.

இயற்கை, ரசாயன முறைஇந்த இரண்டு தொழில்நுட்பத்தின் மூலம் செலவிடப்படும் தொகை, வருமானம், லாபத்தை நாம் கணக்கிட்டால், நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் நெல் சாகுபடியை செய்ய குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் செலவாகிறது. மகசூல் மூலம் ரூ.40 ஆயிரம் வருமானம். இதில் செலவு போக, ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிகர லாபம் கிடைக்கும். ரசாயன முறையில் ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய வருமானத்தில் 30 முதல் 50 சதவீதம் வரை உரத்திற்கு செலவு செய்ய வேண்டும்.

பூச்சி, நோய் மருந்துகள், வேலையாட்கள் கூலி உள்பட ஒரு ஏக்கருக்கு 45 ஆயிரம் வரை செலவாகும். மகசூல் மூலம் ரூ.55 ஆயிரம் வருமானம் கிடைக்கும். செலவு போக கணக்கிட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே நிகர லாபமாக இருக்க முடியும். ரசாயன உரத்தால் மண் நலம் தொடர்ந்து பாதிப்பதால், இந்த வருமானம் படிப்படியாக ஆண்டுதோறும் குறைந்துவிடும் என்பது உறுதி.

ஆக, இயற்கை முறையில் ரூ.40 ஆயிரம் வருமானம், நிகர லாபம் ரூ.20 ஆயிரம். ரசாயன முறையில் ரூ.55 ஆயிரம் வருமானம் கிடைத்தாலும், நிகர லாபம் வெறும் ரூ.10 ஆயிரம்தான். அத்துடன் மண்ணும் நலமாக இருக்கும். இயற்கை உரப் பயன்பாட்டால் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகுவதல், ஆண்டுக்காண்டு மகசூலும் அதிகரிக்கும்.

இப்பொழுது முதல் கணக்கிடுங்கள் விவசாயிகளேபயிருக்குச் செலவழிக்கும் தொகையையும், நமக்குச் சிறந்தது இயற்கையா, செயற்கையா என்பதையும்.

சரி இயற்கை முறையில் சாகுபடி செய்ய வேண்டுமானால், எந்தெந்த இடுபொருட்களைப் பயன்படுத்துவது? என்ன வகையான பூச்சி, நோய் மருந்துகளைத் தெளிப்பது..?

அடுத்த பகுதியில் பார்க்கலாம் – தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet