0 Comments
Published on: Saturday, May 16th, 2020 at 8:29 PM
“செய்வோம் இயற்கை விவசாயம்” – புத்தம் புதிய தொடர் – பகுதி 2
இயற்கை விவசாயம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு இன்று பல்வேறு நபர்கள் பல்வேறு விதமான பதில்களைச் சொல்வார்கள். உண்மையில் என்ன? இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, அதாவது நமது வயலிலும், நம் ஊரிலும் கிடைக்கும் இடுபொருட்களைக் கொண்டு விவசாயம் செய்வதே இயற்கை விவசாயம் ஆகும். இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்துதான் ஆக வேண்டுமா? உண்மையில் இல்லை.
நமது நாட்டில் பசுமைப் புரட்சி தொடங்கும் முன், நமது மூதாதையர்கள் அனைவரும் இயற்கை விவசாயம் தான் செய்து வந்தார்கள். ரசாயன விவசாயம் என்றால் என்ன என்று கேட்டிருப்பார்கள். அவர்கள் யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்களைப் பயன்படுத்தவில்லை. மோனோகுரோட்டாபாஸ், பெவிஸ்டினை அறிந்திருக்கவில்லை. ஆனாலும் விவசாயம் செய்தார்கள்… இந்திய தேசத்தின் முதுகெலும்பாய் விளங்கினார்கள்.
இன்று கதையே மாறிவிட்டது. ரசாயன விவசாயம்தான் எங்கெங்கிலும் கொடிகட்டிப் பறக்கிறது. ஆரம்பத்தில் அள்ளிக் கொடுத்த ரசாயன விவசாயம், நாட்கள் போகப் போக கிள்ளிக் கொடுக்க ஆரம்பித்து விட்டது. அமுத சுரபி என்று நம்பியவர்களுக்கு அட்சயப் பாத்திரமாக மாறிவிட்டது ரசாயன விவசாயம். அதன் காரணமாகத் தான் நாம் இன்று மீண்டும் இயற்கைக்கு திரும்பிக் கொண்டுள்ளோம். திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் விவசாயிகள், விதை, கூலியை தவிர வேறு எதற்கும் பெரிய அளவுக்கு செலவிடவில்லை. ஆகவே முட்டுவலி செலவு மிகக் குறைவாகவே இருந்தது. மாடு வைத்திருந்தவர்கள் சாணத்தை நிலத்திற்கு உரமிட்டனர். மாடு இல்லாத விவசாயிகள், ஊருக்கு பொதுவாய் இருக்கும் உரக்குழிகளில் கொட்டப்பட்டிருக்கும் சாணத்தை எடுத்து உரமாய் பயன்படுத்திக் கொண்டார்கள்.
நிலத்தின் மகசூல் திறனை அதிகரிக்க, அதாவது நிலத்திற்கு சத்துணவு அளிக்க ஆட்டுக்கிடை போட்டார்கள். ஊரில் இருக்கும் வேம்பு, புங்கன், வாகை மரங்களில் சிறுகிளை வெட்டி, வயல் சேற்றில் வைத்து உழவு ஓட்டி தழைச்சத்தை அதிகரித்தார்கள். சாம்பல் மேடுகளில் இருந்த சாம்பலை அள்ளிக் கொண்டுவந்து சத்து அளித்தார்கள். ஆறு, குளங்களில் இருந்து வண்டல் மண்ணைக் கொண்டு வந்து அடியுரமாக இட்டார்கள். அதில் இருந்த மட்குகள் நிலத்திற்கு வளமூட்டின.
இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நாட்டுப் பசுக்களுக்குப் பதிலாக ஜெர்சி போன்ற வெளிநாட்டுப் பசுக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அவற்றின் சாணங்களில் நாட்டுப் பசுக்களுக்கு இணையான சத்துகள் இல்லை. ஆட்டுக்கிடைகள் போடுவதும் குறைந்துவிட்டது. மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு, கான்கிரீட் காடுகள் முளைத்துவிட்டன.
ஆறு, குளங்களில் மணல் கொள்ளையைத் தடுக்க தவறிய அரசு, விவசாயிகள் வண்டல் மண் அள்ள தடைபோட்டுள்ளது. ஆகவே, இன்றைய சூழலில் செலவின்றி இயற்கை விவசாயம் என்பது சாத்தியமில்லாதது. ஆனால் இதெல்லாம் தெரிந்த விவசாயிகளை சில ஏமாற்றுப் பேர்வழிகள் ஜீரோ பட்ஜெட் செய்யலாம் என்று கூறி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகவே அவர்களை அடையாளம் கண்டு விலக வேண்டியது மிக முக்கியம்.
பணம் செலவழிக்காமல் சாணமும், இயற்கை இடுபொருட்களான பஞ்சகவ்யாவும், அமிர்தகரைசலும் இன்னபிற சத்துப் பொருட்களும் இலவசமாக கிடைத்தால் ஜீரோ பட்ஜெட் விவசாயம் சாத்தியம்தான். ஆனால் இவைகளை ஜீரோ பட்ஜெட் சொல்லிக் கொடுப்பவர்கள் இலவசமாக தந்துவிடுவார்களா?
ஒரு பயிருக்கு தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டச் சத்துகளும், 13 வகையான நுண்ணூட்டச் சத்துகளும் தேவை. இவை அனைத்தும் சரியான அளவு கிடைத்தால் மட்டுமே ஒரு பயிர் நமக்கு முழுமையான மகசூலைக் கொடுக்கும். அதிலும் பூச்சி, நோய்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.
ஆக, இன்றைய சூழலில் நாம் எந்தப் பயிரை சாகுபடி செய்ய நினைத்தாலும், அதற்கு ஒரு பெருந்தொகையைச் செலவு செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இயற்கையோ, ரசாயன முறையோ எதுவாக இருந்தால் முட்டுவலி செலவுக்கு என ஒரு தொகை தேவை. ஆனால் ரசாயன முறையை விட, இயற்கை முறையில் பெருமளவு செலவைக் குறைத்து மகசூலைப் பெற முடியும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவது முக்கியம். அதாவது நமது பண்ணைகளில் கிடைக்கக்கூடிய சாணத்தையும், மட்குகளையும், குப்பைகளையும், வீடுகளில் எஞ்சும் காய்கறிக் கழிவுகளையும் பயன்படுத்தி, இயற்கை உரங்களைத் தயாரித்தால் இயற்கை வேளாண்மையில் செலவு குறைவது நிச்சயம்.
நுண்ணுயிர் உரங்கள், குப்பைக் கூழங்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்க தேவையான மண்புழுக்கள் போன்ற சிலவற்றை நாம் செலவழித்து வாங்கியே ஆக வேண்டும். ஆனால் ரசாயன முறையில் தழைச்சத்து உரம் கொடுக்கும் யூரியா முதல் களையைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வரை ஒவ்வொன்றையும் பணம் செலவழித்தே ஆக வேண்டும்.
குறிப்பாக, இன்றைய சூழலில் சிறப்பான முறையில் இயற்கை வேளாண்மை செய்ய பஞ்சகவ்யா, அமிர்த கரைசல், மீன் அமினோ அமிலம், தேமோர் கரைசல், அரப்பு மோர் கரைசல், இ.எம். நுண்ணுயிர் மூலிகைப் பூச்சி விரட்டி உள்ளிட்டவற்றை சிறிது பணம் செலவழித்துப் பயன்படுத்தினால், கண்டிப்பாக நல்ல மகசூலைப் பெற்று, சிறப்பான வருமானத்தையும், லாபத்தையும் ஈட்டலாம் என்பது உறுதி.
சரி இந்த இயற்கை இடுபொருட்களை எவ்வாறு தயாரிக்கலாம். அதை எப்படி பயன்படுத்தலாம்? என்ற கேள்வி உங்களுக்குள் துளிர் விட்டிருக்கும். அவற்றை அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்…
No comments yet