0 Comments
Published on: Thursday, August 6th, 2020 at 7:20 PM
ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்த விவோ… திட்டமிட்டபடி போட்டி நடப்பதில் சிக்கல்…
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2020க்கான ஸ்பான்சர்ஷிப்பை சீன நிறுவனமான விவோ திரும்பப்பெற்றுக் கொண்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத இறுதியில் தொடங்க இருந்த 13வது ஐபிஎல் கிர்க்கெட் போட்டிகள் கொரோனா காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. எனினும் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஏற்பாடுகள் தயாராகின.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா-சீன இடையே எல்லை பிரச்சனை ஏற்பட்டு இருநாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதால், தமிழகவீரர் பழனி உட்பட இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து சீனப் பொருட்களை தவிர்க்குமாறு, இந்தியா முழுவதும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் கூடி போட்டிகளை வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை 53 நாட்கள் நடத்த முடிவு செய்தது. இந்த கூட்டத்தின் முடிவில் ஸ்பான்சர்கள் அனைவரும் பழைய ஒப்பந்தத்தின்படியே தொடர்வார்கள் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதன்மை ஸ்பான்சராக விவோ என்ற சீன நிறுவனம் உள்ளது.
இந்திய-சீன எல்லை பிரச்சனை நிலவும் நிலையில், சீன நிறுவனம் ஐபிஎல்க்கு ஸ்பான்சர் அளிப்பதா? என சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து நடப்பாண்டு மட்டும் ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்துகொள்வதாக பிசிசிஐயிடம் விவோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், புதிய ஸ்பான்சர்களை தேடும் நிர்பந்தத்துக்கு பிசிசிஐ ஆளாகியுள்ளது. புதிய ஸ்பான்சர்கள் கிடைக்கும் பட்சத்தில் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெற உள்ளன.
No comments yet