Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆவாரையில் ஓர் அற்புத தேநீர்… போயே போச்.. நீரிழவு பிரச்சனை…

0 Comments

Published on: Wednesday, May 13th, 2020 at 8:37 PM

ஆவாரையில் ஓர் அற்புத தேநீர்… போயே போச்.. நீரிழிவு பிரச்சனை…

ஜன்னலோரப் பேருந்துப் பயணங்களில், வழியெல்லாம் வறண்ட மானாவரி நிலங்களில் பூத்து நிற்கும் பொன் மஞ்சள் நிற ஆவாரம் பூக்களை அநேகம் பேர் கவனித்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அந்தப் பூக்கள் எல்லாம் இன்று, ஆங்காங்கே இருந்து புறப்பட்டு பஸ் ஏறி, ரயில் ஏறி, சென்னைப் பூங்காக்களின் வாசல்களில் காலை நடைப்பயிற்சி செய்து வெளிவரும்இனிப்புமிகுந்தவர்களை, வரவேற்கும்பொக்கேக்களாய் அல்லது ரெடிமேட் ஆவாரை மூலிகைத் தேனீராய் அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டன. ஆம்! ஆவாரம்பூ இன்று நீரிழிவு வியாதிக்காரர்கள் அதிகம் தேடும் மூலிகை. ஆவாரையில் அப்படி என்ன இருக்கிறது?

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் நீர்

அன்று ஆவாரம்பூ அநேகமாகக் கடும் வெயிலில், உழவுப் பணிசெய்யும் விவசாயி, உச்சி வெயில் தன் மண்டையைப் பிளக்காமல் இருக்க, சூட்டைத் தணிக்கும் மூலிகையாக தன் தலைப்பாகையில் வைத்துக் கட்டியிருந்தார். சித்த மருத்துவமோ பித்தச் சூட்டை மட்டு மல்லாது மேகச் சூட்டையும், அதையொட்டி உடலினுள் ஓடி வரும் பிரமேகமாகிய நீரிழிவை யும் கட்டுப்படுத்தும் என ஆவாரையை அடையாளம் காட்டியது. சூட்டால் கண்கள் மீது ஏற்படும் பாதிப்பையும் தடுக்கும் என ஆவணப்படுத்தியிருக்கிறது.

ஆவாரைச் செடியில் பூ மட்டுமல்லாது இலை, தண்டு, வேர் அத்தனையையும் சேர்த்து கஷாயமிட்டுச் சாப்பிடச் சொன்னதுஆத்மரட் சாமிர்தம்எனும் ஆயுர்வேத நூல். சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கான மிகப் பிரபலமான கஷாயம் ஆவாரைக் குடிநீர். ‘தேரன் குடிநீர்எனும் தொகுப்பில் இந்த ஆவாரைக் குடிநீரும் ஓர் அங்கம்.

ஏழு மூலிகைகள்

எப்படி நிலவேம்புக் குடிநீர் என்பது நில வேம்பு மட்டுமல்லாது, கூடுதலாக 7 மூலிகை களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் பானமோ, அதேபோல, சித்த மருத்துவம் அடையாளம் காட்டியஆவாரைக் குடிநீரும்ஆவாரையுடன் கூடுதலாக ஏழு மூலிகைகளைக் கொண்டது. இது குறித்துப் பரிபாஷையாய்ப் பாடப்பட்ட பாடலை விரித்துப் பெற்ற விளக்கத்தில் கிடைத்த நவீன விஞ்ஞானப் புரிதல், இன்னமும் வியக்க வைக்கிறது. அந்த அருமையான பாடல் இதுதான்:

ஆவாரை கொன்றை நாவல் அலைகடல் முத்தங் கோஷ்டம் மேவிய மருதத்தோலும் மிளிர்ந்திட ரொக்கக் கொண்டு, பூவிரி குழலினாளே! காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும் தானேஎனும் அந்தப் பாடலின் கடைசி வரியை மேலோட்டமாகப் படித்தால் தலைசுற்றும். ‘அதான் ஏற்கெனவே காவிரி வற்றித்தானே இருக்கு? கன்னடத்துச் சித்தராமய்யா சொல்றது பத்தாதா? புதுசா இந்த தேரன் சித்தர் என்ன சொல்ல வர்றார்?’ எனக் குழப்பும்.

சித்தர் பரிபாஷையாய்ச் சொன்ன சூட்சுமம் இதுதான். காவிரி நீர் இனிப்பாய் இருக்கும். கடல் நீர் உவர்ப்பாய் இருக்கும். இனிப்புச் சிறுநீரைத் தரும் நீரிழிவு நோய்க்கும், அதனால் நாளடைவில் ஏற்படும் சிறுநீரகச் செயல்பாட்டுக் குறைவால், புரதம் கலந்த சிறுநீர் வரும் சிறுநீரக நோய்க்கும் என இரண்டுக்குமே ஏற்றது இந்த ஆவாரைக் குடிநீர் என்பதுதான் அதன் பொருள்.

ஆவாரைஆஹாஆய்வு

ஆவாரைக் குடிநீரில் இன்று பல மருத்துவ ஆய்வுகள் நடைபெற்று, சித்தர் சொன்னதை உறுதிப்படுத்தியுள்ளன. புத்தாயிரம் ஆண்டிலேயே, சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று ஆவாரைக் குடிநீர் எப்படிப் பயன்படுகிறது என ஆராய்ந்து அறிவித்தது.

தொடர்ச்சியான ஆய்வுகள் எல்லாம் அதன்ஆல்ஃபா அம்லேஸ் இன்ஹிபிஷன்’, ‘ஆல்ஃபா கிளைக்கோசிடேஸ் இன்ஹிபிஷன்எனும் இரு செயல்திறன்கள் மூலம் ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல், தங்காமல் இருக்க உதவுவதை உறுதிப்படுத்தின.

கூடவே கணினி மூலமாக ஆவாரையின் அத்தனை தாவரக்கூறுகளை ஆராய்ந்து அறிந்ததில், ஆவாரையின் மருத்துவக் கூறுகள் போய், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் நொதிக்கற்றையில் கூடுவதைடாக்கிங்மூலம் உறுதிப்படுத்தியுள்ளன.

நீரிழிவு நோயில் வரும் அதிக நாவறட்சி, மெலிவு, உடற்சோர்வு இத்தனைக்கும், ஆவாரைக் குடிநீர் பயன்படுவதை ஆரம்பகட்டரிவர்ஸ் பார்மகாலஜிமற்றும்கிளினிக்கல் ரிசர்ச்மூலம் உறுதிசெய்துள்ளனர் இன்றைய ஆய்வாளர்கள்.

கடலழிஞ்சிக்குக் காப்புரிமை

இந்த ஆய்வுப் பயணம் இன்னமும் பல மைல் தூரம் பயணிக்க வேண்டியிருந்தாலும், பல நூறு ஆண்டுகள் பழக்கத்தில், மரபு மருத்துவத்தில் பெரும் பயன் தரக் கூடியதான ஆவாரைக் குடிநீரை, இனி நீரிழிவு நோய் கண்டவர்கள் தினமும் மூலிகைத் தேநீராய்ச் அருந்துவது சிறப்பு.

இந்தக் குடிநீரைத் தயாரிக்கும்போது கடலழிஞ்சில் எனும் மூலிகையும் சேர்க்கப்படுகிறது. நீரிழிவு நோய்க்கு அது பயன்படும் விதத்தில் ஒரு காப்புரிமையை அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழகம் பெற்றுள்ளது என்பது கூடுதல் செய்தி.

நீங்கள் எந்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டாலும் சரி, கூடவே ஆவாரைக் குடிநீரைச் சிறப்பு பானமாக அருந்தினால், உடலில் இனிப்பு குறையும். உள்ளத்தில் இனிப்பு குதூகலிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet