0 Comments
Published on: Saturday, August 29th, 2020 at 10:51 PM
இ-பாஸ் முழுமையாக ரத்து… மெட்ரோ ரயில் இயங்கலாம்… மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு 4.0..!
ஊரடங்கு தளர்வு 4.0 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, மாவட்டங்களுக்கு இடையே செல்ல இபாஸ் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 3.0, வரும் 31ஆம் தேதி திங்கட்கிழமையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வு 4.0 தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஊரடங்கு தளர்வு 4.0 செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் கிடையாது என்றாலும், பிற பகுதிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை பகுதி நேரமாக இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமூக, கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு, பண்பாடு, மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் முகக்கவசம், தனி மனித இடைவெளி, உடல் வெப்ப நிலையை அறிதல், சானிடைசர் உள்ளிட்ட நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
செப்டம்பர் 21ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30 வரை மூடப்பட்டிருக்கும். ஆன்லைன் வகுப்புகளை நடத்த 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர் அனுமதியுடன் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க வரலாம்.
திரையரங்குகள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்கா செயல்பட அனுமதியில்லை. இருப்பினும் திறந்தவெளி திரையரங்குகள் இயங்கலாம். மத்திய அரசு அனுமதித்துள்ள வந்தே பாரத் விமானங்களைத் தவிர, மற்ற விமானங்களுக்கு அனுமதியில்லை. மத்திய அரசு அனுமதியில்லாமல், நோய் கட்டுப்பாட்டு பகுதியைத் தவிர பிற பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது.
மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இபாஸ் தேவையில்லை என்றும், கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர பிற இடங்களுக்குச் செல்ல எவ்வித தடையும் விதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments yet