0 Comments
Published on: Monday, August 3rd, 2020 at 3:51 PM
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு…
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கையை அறிவித்தது வருத்தம் அளிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை எனக் கூறி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலுவல் மொழிகள் சட்டம் 1963ன் 3வது பிரிவில் இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்கள், மத்திய அரசுடன் ஆங்கில மொழியை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தலாம் என தெளிவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 80 ஆண்டு காலமாக இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ள தமிழக மக்கள், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருந்ததாக கூறியுள்ளார். மத்திய அரசு வரைவு தேசிய கல்வி கொள்கையை வெளியிட்டபோதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதை சுட்டிக் காட்டி, அதனை தீவிரமாக எதிர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என்று உறுதிபட தெரிவித்து கடந்த ஜூன் 26ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தாலும், அதனை தமிழகத்தில் எப்போதும் அதிமுக அரசு அனுமதிக்காது என்றும், இரு மொழிக் கல்வி கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்த சூழலில், மத்திய அரசின் செயல்பாடு வேதனையையும், வருத்தத்தையும் அளிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் மொழிக் கொள்கைக்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும்போது அதனைக் களைய அதிமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
No comments yet