0 Comments
Published on: Thursday, August 20th, 2020 at 9:49 PM
விநாயகர் சதுர்த்தி திருவிழா: தமிழக அரசு போட்ட புதிய உத்தரவு… போலீஸ் எடுத்த அதிரடி முடிவு…
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே கொண்டாடுமாறு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் கூட்டு வழிபாடுகளுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படியும், மாநிலத்தில் உள்ள நிலையை கருத்தில் கொண்டும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பது, பொது இடங்களில் வழிபாடு நடத்துவது, சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பது போன்றவற்றை தமிழக அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்றுமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதும், அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடையை மீறி பொது இடங்களில் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவோம் என இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகர ஆணையர் நடத்திய ஆலோசனையிலும் உடன்பாடு எட்டப்படாததால், தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, போலீஸ் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments yet