0 Comments
Published on: Monday, September 7th, 2020 at 10:39 PM
ரூ.10 கோடி… அரியர் மாணவர்களுக்கு அதிமுக செய்த செலவு… மோதலால் நீடிக்கும் குழப்பம்..!
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கும் விவகாரத்தில் தமிழக அரசும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகமும் மோதிக் கொள்வதால், மாணவர்களிடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரங்கால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசு, அரியர் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்தாலே, அவர்களும் தேர்ச்சி என கூறியிருந்தது. அத்துடன், மாணவர்கள் சங்கம் பெயரில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விளம்பரங்களை அதிமுக வெளியிட்டது. நாளிதழ்களில் விளம்பரம் செய்ய மட்டுமே அதிமுக 10 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.
இதன்மூலம் வரும் தேர்தலில் இளைஞர்களின் கணிசமான வாக்குகளை அள்ளிவிடலாம் என அதிமுக திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசின் அரியர் பாஸ் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், தமிழக அரசின் அறிவிப்பை ஏற்க முடியாது என கூறியதாக தகவல் வெளியானது.
இது குறித்து தெரிவித்த சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடியாது என ஏஐசிடிஇ அனுப்பிய கடிதத்தை, தமிழக அரசுக்கு அனுப்பி விட்டதாக கூறினார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அவ்வாறு ஒரு கடிதமே வரவில்லை என கூறினார். இந்நிலையில், மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த சூரப்பா, ஏஐசிடிஇ-யின் இரண்டாவது முறையாக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்ததாக கூறினார்.
இந்த தகவலை மீண்டும் மறுத்துள்ள அமைச்சர் கே.பி.அன்பழகன், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசின் முடிவை ஏஐசிடிஇ ஏற்பதாக தெரியவில்லை. இதனால், அரியர் மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா? என்பது தெரியாமல் குழப்பமே நீடித்து வருகிறது. இதனால், தமிழக அரசும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments yet