Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து… பேருந்துகளை இயக்க அனுமதி… ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை..!

0 Comments

Published on: Sunday, August 30th, 2020 at 7:19 PM

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து… பேருந்துகளை இயக்க அனுமதி… ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை..!

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டித்துள்ள மாநில அரசு, இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ள தமிழக அரசு, இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால், மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதோடு, சென்னையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தை தொடங்கவும் அனுமதி தந்துள்ளது. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதோடு, அனைத்துக் கடைகளையும் மேலும் ஒரு மணி நேரம், அதாவது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கவும் அனுமதி அளித்துள்ளது. வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தேநீர் கடைகளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி தந்திருப்பதோடு, உணவகங்களில் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பார்சல் சேவை ஏற்கெனவே உள்ளது போன்று இரவு 9 மணி வரை தொடரும்.

தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவையும் இயங்க அனுமதி. இருப்பினும், திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், நீச்சல் குளங்கள் இயங்க தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, ஞாயிற்றுக்கிழமைகளில் இனி முழு ஊரடங்கு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் முழு அளவில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, 75 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பயணிகள் ரயில் போக்குவரத்திற்கான தடை செப்டம்பர் 15ஆம் தேதி வரை தொடரும் என்றும், மாநிலங்களுக்கு இடையே அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் ரயில்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை விரைவில் அறிவிக்கப்படும் என்றும், சென்னை விமான நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் விமான நிலையங்களில் தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet