Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பெயரோ நீதிமோகன்… ஆனால் செய்த வேலையை பார்த்தால் மிரண்டு போவீர்கள்…

0 Comments

Published on: Monday, May 18th, 2020 at 11:44 AM

பெயரோ நீதிமோகன்… ஆனால் செய்த வேலையை பார்த்தால் மிரண்டு போவீர்கள்…

குறைந்த விலையில் வீட்டுமனை வாங்கித்தருவதாக ரூ.50 கோடியை பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் நீதி மோகன். கடந்த 2008ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்திற்கு புலம்பெயர்ந்த இவர், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு பல்வேறு பெயர்களில் 29 நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனர்.

திருவாரூரில் நீதிமோகன் நடத்திவந்த கிருஷ்ணா ரியல் எஸ்டேட் அலுவலகத்தைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 1,200 சதுரடி நிலம், விலை ரூ.96,000, மாதம் ரூ.1,000 தவணை செலுத்தினால் போதும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தால், நீதிமோகனின் கிருஷ்ணா ரியல் எஸ்டேட் நிறுவனம் திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வெகுபிரபலம்.

இது என்ன பிரமாதம்.., இன்னொரு கவர்ச்சித்திட்டத்தையும் நீதிமோகன் குழு அறிமுகப்படுத்தியது. மொத்தம் 48 மாதங்கள் கொண்ட திட்டத்தில் சேர்ந்து, மாதத்திற்கு ரூ.500 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் ஒருவர் செலுத்தலாம். ஒவ்வொரு மாதமும் அலுவலகத்தில் நடக்கும் குலுக்கலில், தேர்வானவருக்கு நிலம் வழங்கப்படும். மீதித் தொகையை அதன் பிறகு செலுத்த வேண்டிய தேவையில்லை.

அந்தந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருபவர்கள் உள்பட யார் வேண்டுமானாலும், நீதிமோகனின் நிறுவனங்களில் ஏஜெண்டாக செயல்பட்டு வாடிக்கையாளர்களை சேர்க்கலாம். லாபத்தை அள்ளலாம் என்ற திட்டமும் அமல்படுத்தப்பட்டது.

கொழிக்கும் லாபம்… அசுர வளர்ச்சியால் திருவாரூரில் மட்டுமின்றி, தஞ்சாவூர், நாகை, கடலுார் மாவட்டங்களிலும் காரைக்காலிலும் பல பெயர்களில், பல துணை நிறுவனங்களையும் நீதிமோகன் நடத்தினார். தவணை முறை திட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நீதிமோகனிடம் வீட்டுமனைகளை வாங்கியுள்ளனர்.

ஆனால், தங்களிடமிருந்து ரூ.50 கோடி வரை பணத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டு மனை தருவதாக மோசடி செய்தாக நீதிமோகன் மீது புகார்கள் குவிந்தன. நீதிமோகன் மீது திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் திருவாரூர் நகர காவல் நிலையங்களில்  வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

தகவல் அறிந்த நீதிமோகன் தலைமறைவானார். அவரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் 6 மாத காலமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவான இடத்திலிருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களுடன் தனிப்படை போலீசார் நீதிமோகனை கைது செய்தனர்.

போலீசிடம் சிக்கியது, தான் ஒரு அப்பாவி, தன்னுடன் இணைந்து செயல்பட்ட 25க்கும் மேற்பட்ட கூட்டாளிகள் தன்னை ஏமாற்றிவிட்டதாக வாக்குமூலம் அளித்தா நீதிமோகன். நீதிமோகன் கொடுத்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

ஏற்கெனவே பலமுறை மோசடி செய்த நீதிமோகனை, பணம் கொடுத்து ஏமாந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கடந்த 2018ஆம் கடத்திச் சென்ற சம்பவமும் அரங்கேறியது. ஆனால், அந்த ஆசிரியரை கைது செய்த போலீசார், மோசடி செய்த நீதிமோகன் மீது நடவடிக்கையே எடுக்காமல் விட்டுவைத்தது, நீதிமோகன் மேலும் மேலும் மோசடி செய்ய வசதியாக போய்விட்டது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

எப்படியாவது ஒரு வீட்டுமனை வாங்கி, வீடு கட்டிவிட மாட்டோமா என்ற, தங்களது கனவில் மண் அள்ளிப் போட்ட நீதிமோகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். நீதி மோகனால் நீதி கிடைக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet