0 Comments
Published on: Sunday, May 31st, 2020 at 7:03 PM
போர்ஃப்ஸ் வெளியிட்ட பட்டியல் – இந்திய வீரர்களில் விராட் கோலி மட்டும்தான்…
உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.
உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ஃப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 5ஆம் இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது ஊதியம் ரூ.800 கோடியாக உயர்ந்துள்ளது.
முதல் இரு இடங்களில் இருந்த போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டினோ ரொனால்டோ, அர்ஜென்டினாவைச் சேர்ந்த லயோனல் மெஸ்சி ஆகியோர் 2 மற்றும் 3வது இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குழுவாக விளையாடும் வீரர்களின் ஊதியம் குறைக்கப்பட்டது, அவர்களின் வருமானம் குறைய முக்கியக் காரணம்.
ரொனால்டோ ரூ.787 கோடியும், மெஸ்சி அவரை விட ரூ.7.5 கோடி குறைவாகவும் சம்பாதிக்கின்றனர். பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ரூ.716 கோடியுடன் 4ஆம் இடம் பிடித்துள்ளார்.
அதிகம் சம்பாதிக்கும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இரு பெண்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ரூ.280 கோடி வருவாய் ஈட்டி 29வது இடத்தில் உள்ளார். அவருக்கு நான்கு இடங்கள் கீழே உள்ள அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் ரூ.270 கோடி சம்பாதித்துள்ளார்.
முதல் 100 பேரில் ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 100வது இடத்தில் இருந்த கோலி 34 இடங்கள் முன்னேறி 66வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு ஓராண்டில் ரூ.195 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதில், ரூ.180 கோடி விளம்பரங்களில் நடித்ததன் மூலமும், ரூ.15 கோடி ஊதியம் மற்றும் வெற்றிக்கான பரிசுத் தொகை மூலமும் கிடைத்துள்ளது.
No comments yet