0 Comments
Published on: Friday, August 14th, 2020 at 10:59 AM
மனைவியை கண்டித்த கணவர்… வீடு புகுந்து வெட்டிக் கொன்ற கள்ளக்காதலன்…
தென்காசி அருகே டாஸ்மாக் கண்காணிப்பாளர் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கள்ளக்காதலே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
சங்கரன்கோவில் அருகிலுள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ஊர்மேல் அழகியான் அருகிலுள்ள சங்குபுரம் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி உஷா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அக்ரஹாரம் தெருவில் சொந்தமாக வீடு வாங்கி குடும்பத்துடன் வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கு விடுமுறையால் குழந்தைகளுடன் மனைவி தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்து வந்த முத்துப்பாண்டி புதன்கிழமை அதிகாலை வழக்கம் போல எழுந்து வாக்கிங் சென்று வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, அவரது வீட்டின் பின்வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்துள்ளது. சத்தம்போட முடியாமல் முத்துப்பாண்டி அணிந்திருந்த கைலியால் முகத்தை மூடியுள்ளனர். பின்னர் சரமாரியாக முத்துப்பாண்டியை வெட்டி கொலை செய்துவிட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. ஒரு கும்பல் முத்துப்பாண்டி வீட்டிலிருந்து ஓடுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், சாம்பவர் வடகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து சென்ற போலீசார், முத்துப்பாண்டி வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் பின்பகுதியில் முத்துப்பாண்டி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
டாஸ்மாக் கடையில் முதல் நாள் விற்பனையான பணம் ரூ.8 லட்சம் வீட்டில் அப்படியே இருந்ததால் கொலை பணத்திற்காக நடக்கவில்லை என தெரிந்தது. எனவே கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
முத்துப்பாண்டி மனைவி உஷாராணிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது கணவர் முத்துப்பாண்டிக்கு தெரிய வரவே மனைவியை கண்டித்து உள்ளார். கணவர் டாஸ்மாக் கடைக்கு செல்லும் நேரம் இருவரும் தங்கள் பழக்கத்தை தொடர்ந்து வந்துள்ளனர்.
இதனால் ஆறுமுகத்தை பலமுறை முத்துப்பாண்டி எச்சரித்துள்ளார். தொடர்ந்து தனது மனைவியோடு பழகினால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த ஆறுமுகம், தன்னை முத்துப்பாண்டி தீர்த்துக்கட்டுவதற்கு முன்னர், அவரை தீர்த்துக்கட்டிவிடலாம் என முடிவுக்கு வந்துள்ளார்.
இதனால் டாஸ்மாக் பணி முடித்து நள்ளிரவில் வீடு திரும்பிய அவரை டிராக்டர் மற்றும் காரால் மோதி இருமுறை கொல்ல முயற்சித்துள்ளார். அதிலிருந்து தப்பிய முத்துப்பாண்டி, குடும்ப கவுரவத்துக்காக இது குறித்து போலீசில் புகார் ஏதும் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இருப்பினும் முத்துப்பாண்டிய தீர்த்துக்கட்ட பல்வேறு வகையில் ஆறுமுகம் முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் வீடு புகுந்து முத்துப்பாண்டியை ஆறுமுகம் தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதை அடுத்து வீடு புகுந்து முத்துப்பாண்டியை வெட்டிக் கொலை செய்ததாக ஆறுமுகம், இசக்கிதுரை, ஞானகுரு, கந்தசமி, செண்பகராஜ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
No comments yet