0 Comments
Published on: Thursday, July 30th, 2020 at 10:59 PM
சுழன்றடிக்கப் போகும் சூறாவளி… தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெளுக்கப் போகும் மழை…
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 செ.மீ., முதல் 5 செ.மீ., வரை மழை பதிவாகி இருப்பதாகவும், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பதிவாகி இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான், மன்னார் வளைகுடா, கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 – 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments yet