0 Comments
Published on: Friday, June 19th, 2020 at 1:20 PM
கொரோனாவுக்கு மருந்தை கண்டறிந்த பிரிட்டன் ஆய்வாளர்கள்… உயிரிழப்பை பெருமளவு குறைப்பதாக உறுதி…!
கொரோனா தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மருந்து ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இந்த மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுவதாக கூறியிருப்பது, மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வுக்குழு, எச்.ஐ.வி., எபோலா, மலேரியா என பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் கொரோனாவை தடுக்க உதவுமா? என ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்படி அவர்களின் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்துதான் டெக்சா மெத்தாசோன்.
இது அழற்சி, கீல் வாதம், தோல் தொடர்பான நோய்களுக்கு பயன்படுத்தபடும் ஸ்டீராய்டு வகை மருந்து. கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் செலுத்தப்படும் மற்றும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள 2,104 நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 16 மில்லி கிராம் கொடுத்துள்ளனர். இதே நிலையில் உள்ள 4,321 பேருடன் மருந்து கொடுக்கப்பட்டவர்களின் உடல்நிலையை ஒப்பிட்டபோது மிகப்பெரிய ஆச்சரியம் தெரியவந்தது.
வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பை மூன்றில் ஒரு பங்கு இது குறைக்கிறது என்றும், ஆக்சிஜன் செலுத்தப்படும் நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பை ஐந்தில் ஒரு மடங்கு குறைக்கிறது என்றும் இந்த ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. வென்டிலேட்டரில் உள்ள நோயாளியின் இறப்பு விகிதத்தை 40-ல் இருந்து 28%ஆகவும், ஆக்சிஜன் சப்ளை வழங்கப்பட்டுள்ள நோயாளியின் இறப்பு விகிதத்தை 25-ல் இருந்து 20%ஆகவும் டெக்சாமெத்தாசோன் குறைக்கிறது.
கொரோனாவின் தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு இந்த மருந்து பலனளிக்காது என்றும் ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இந்த மருந்தை ஆரம்பத்திலேயே பயன்படுத்தியிருந்தால் பிரிட்டனில் 5,000 உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்த சர் பேட்ரிக் வல்லான்ஸ் கூறியுள்ளார். இதன் மூலம் வெறும் ரூ.3,500 செலவில் அபாய கட்டத்தில் உள்ள கொரோனா நோயாளியின் உயிரை காக்க முடியும் என்பது ஏழ்மை நாடுகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
டெக்சாமெத்தாசோன் மருந்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவது அந்த நோய்க்கு எதிரான போராட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். 2 லட்சம் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் எதிர்காலத் தேவைக்கு இது போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும் இந்த மருந்து போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக கூறப்படுவதால், வரும் நாட்களில் இங்கும் கொரோனா உயிரிழப்புகள் பெருமளவு குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
No comments yet