0 Comments
Published on: Tuesday, June 23rd, 2020 at 8:02 PM
பல மாவட்டங்களில் கடைகளைத் திறக்க நேரக் கட்டுப்பாடு – எந்தெந்த மாவட்டத்தில், எந்த நேரத்தில் கடை இருக்கும்?
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கடைகளை திறக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், வியாபாரிகள் நலன் காக்கும் வகையிலும் திருப்பூர் மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சில முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, இன்று (செவ்வாய்) முதல் ஜுலை 1ஆம் தேதி வரை அனைத்து கடைகளும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்படும் எனவும், உணவகங்கள் அரசு வழிகாட்டுதலின்படி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர் பகுதியில் நாளை (24ஆம் தேதி) முதல் 30ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வணிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திண்டுக்கல்லில் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மளிகை கடைகள், நகை, துணிக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
நாமக்கல்லில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்றும், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 வரை செயல்படும் எனவும் ஆட்சியர் மெகராஜ் கூறியுள்ளார். ஓட்டல்கள் வழக்கம்போல் இரவு 9 மணி வரை செயல்படும் எனக்கூறிய ஆட்சியர், செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் இருக்கும் எனத் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையும், ராமநாதபுரத்தில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
No comments yet