Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எஃப்.எம். ரேடியோ மூலம் தம்பி கொலை – நில விவகாரத்தால் அண்ணன் செய்த கொடூரம்…

0 Comments

Published on: Friday, June 26th, 2020 at 10:21 PM

எஃப்.எம். ரேடியோ மூலம் தம்பி கொலை – நில விவகாரத்தால் அண்ணன் செய்த கொடூரம்…

நிலப் பிரச்சனையால் உடன் பிறந்த அண்ணனே எஃப்.எம். ரேடியோவில் டெட்டனேட்டர்களை பொருத்தி வெடிக்கச் செய்து தம்பியை கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த தும்பல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. கடந்த 17ஆம் தேதி காலையில் பூந்தோட்டத்திற்கு செல்லும் வழியில் பை ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்தபோது, அதில் ஒரு எஃப்.எம். ரேடியோ, ஒரு குவார்ட்டர் பாட்டில், மிக்சர் பாக்கெட் ஆகியவை இருந்துள்ளன.

வேலை முடிந்த பின் மாலையில் அந்தப் பையை வீட்டிற்கு எடுத்துச் சென்ற மணி, அதில் உள்ள எஃப்.எம். ரேடியோவுக்கு மின் இணைப்பு கொடுத்து, பாட்டு கேட்க முயன்றபோது, அந்த ரேடியோ பயங்கர சத்தத்துடன்  வெடித்ததில் கை சிதறி அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்து மணி உயிரிழந்தார்.

உடன் இருந்த அவரது பேத்தி, உறவினர்கள் வசந்தகுமார், நடேசன் ஆகியோரும் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்திய போலீசார், மணி வீட்டின் கதவு சேதமடைந்ததோடு, பெரிய சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறியதையும் அறிந்தனர். சாதாரண மின்சாதனமாக இருந்தால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருக்காது என்றும், வெடிகுண்டு போன்ற ஏதாவதாக இருக்கலாம் என்றும் சந்தேகித்தனர்.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், மணியின் அண்ணன், செங்கோடன் முன்னுக்குப் பின் முரணாகப் பதில்கள் கூறி வந்த நிலையில் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை செங்கோடன் வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றது போலீசுக்கு தெரியவந்தது.

இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியதால், செங்கோடனிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோதுதான், டெட்டனேட்டரை பயன்படுத்தி மணி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. வீட்டருகே உள்ள நிலத்தை, மணியும், அவரது இன்னொரு சகோதரும் சேர்ந்து ஓராண்டுக்கு முன்பு 20  லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.

அப்போது, தனக்கு அந்த நிலம் தேவையில்லை என செங்கோடன் விலகிக் கொண்டார். ஆனால், மணி வாங்கிய நிலத்தின் வழியாகத் தான் செங்கோடன் தனது தோட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், கடந்த சில மாதங்களாக தானும் பணம் கொடுப்பதாகத் தெரிவித்து வந்தார். ஆனால் மணியும், அவரது இன்னொரு சகோதரரும் செங்கோடனின் விருப்பத்தை நிராகரித்துள்ளனர். தாங்கள் கேட்டபோது வராத செங்கோடன், இப்போது தனக்கு தேவையிருப்பதால், வர நினைக்கிறார் என இருவரும் ஒதுக்கியுள்ளனர்.

இதனால், மணியை கொலை செய்ய திட்டமிட்ட செங்கோடன், நாமகிரிப்பேட்டை சென்று அங்குள்ள வெடி பொருட்கள் விற்கும் கடையில் கிணறு வெட்ட வேண்டும் எனக் கூறி டெட்டனேட்டர்களை வாங்கியுள்ளார். பின்னர் சேலம் புதிய பேருந்து நிலையம் சென்று அங்குள்ள கடையில் எஃப்.எம். ரேடியோ ஒன்றை ரூ.900 கொடுத்து வாங்கிய அவர், அதில் டெட்டனேட்டர்களை வைத்து இணைத்துள்ளார்.

மின் சாதனங்களை பழுதுபார்க்கும் வேலை செங்கோடனுக்கு தெரியும் என்பதால், தனது கொலைத் திட்டத்தை அதன்மூலமே நிறைவேற்ற முடிவு செய்து, கடந்த 17ஆம் தேதி காலையில்எஃப்.எம். ரேடியோ, மது பாட்டில் மற்றும் ஒரு மிக்சர் பாக்கெட் ஆகியவை அடங்கிய கைப்பையை மணி செல்லும் பாதையில் வீசி விட்டு வந்து விட்டார்.

டெட்டனேட்டர் மட்டும் வைத்தால் கொலை நோக்கம் தெரிந்து விடும் என்பதால், யாரோ வாங்கிச் செல்வது போல, அதில் மதுபாட்டிலும், மிக்சர் பாக்கெட்டையும் வைத்ததாக வாக்குமூலத்தில் செங்கோடன் தெரிவி்த்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

சாதாரண ஒரு சொத்திற்காக, உடன்பிறந்த சகோதரனை கொடூரமாக கொலை செய்த சம்பவம், சேலம் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet