0 Comments
Published on: Wednesday, August 12th, 2020 at 11:48 AM
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த ரஷ்யா… மகளுக்கே முதலில் செலுத்திய அதிபர் புடின்..!
கொரோனா வைரசுக்கு உலகிலேயே முதன்முறையாக ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதை தனது மகளுக்கு செலுத்தியிருப்பதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்துக்கு ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கமாலேயா தேசிய ஆராய்ச்சி மையமும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. தடுப்பு மருந்தை தனது இரண்டு மகள்களில் ஒருவருக்கு செலுத்தியதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் தடுப்பு மருந்து, பொது மக்களுக்கு செலுத்தப்படும் என்றும் ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தடுப்பு மருந்தானது அடினோவைரஸ் அடிப்படையிலான தடுப்பூசியாகும். இது மனிதர்களில் சளியை உருவாக்கும் அடினோ வைரஸின் இரண்டு மாதிரிகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அவை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களிலிருந்து புரதத்தை உருவாக்கும் வகையில் மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவருக்கு இரு மடங்கு எதிர்ப்பு சக்தி உருவாகும் என கூறப்படுகிறது.
ஜூன் மாதம் 18ஆம் தேதி முதன்முதலில் தடுப்பு மருந்தின் மீதான பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 38 தன்னார்வலர்கள் சோதனையில் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவானதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஜூலை 15ஆம் தேதியும், இரண்டாவது குழு ஜூலை 20ஆம் தேதியும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தடுப்பு மருந்து குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிய நிலையில், மனித உடலில் செல்லும் SARS-CoV-2 வைரஸ் பல்கி பெருகாது என கமாலேயா தேசிய ஆராய்ச்சி மைய இயக்குநர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பு மருந்துக்கு ரஷ்யாவின் கண்காணிப்பு மையமான அனா போபோவாவும் அனுமதி அளித்துள்ளது. ஆனால், ரஷ்யா அரசு அளித்துள்ள தரவுகள் குறித்து அந்நாட்டின் தொற்று நோய் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குநர் அலெக்சாண்டர் செப்நோர்வ் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பு மருந்து அவசர கதியில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தடுப்பு மருந்து விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கவனமாக எடுக்கும் படி உலக சுகாதார மையமும் அறிவுறுத்தியுள்ளது.
No comments yet