Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பார்க்குறது புரோக்கர் வேலை… அதுல இது வேற… போலீசிடம் சிக்கிய நபர்…

0 Comments

Published on: Wednesday, January 8th, 2020 at 9:46 AM

சேலத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை விற்க முயன்றவரை, வாட்ஸ்அப் மூலம் அணுகிய போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சேலம் ஆத்தூரில் உள்ள கங்கவல்லி என்ற பகுதியில் ராஜசேகரன் என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர், கடந்த 3 மாதமாக ஐம்பொன் சிலையை விற்க முயல்வதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலையை வாங்கும் நபர் போல் காவலர் ஒருவரை நடிக்க வைத்து, ஐம்பொன் சிலையை மீட்டு உள்ளனர். முதற்கட்டமாக ராஜசேகரனை வாட்ஸ்அப் மூலமாக அணுகியுள்ளனர். சிலை குறித்து தகவல்களை வாட்ஸ் அப்பில் பறிமாறியுள்ளார். சிலையின் மதிப்பு 5 கோடி ரூபாய் என பேரம் பேசியுள்ளார். ராஜசேகரனிடம் சிலையின் புகைப்படத்தை அனுப்புமாறு, சிலையை வாங்கும் நபர் கேட்டுள்ளார். சிலையின் புகைப்படத்தை அனுப்ப மறுத்த ராஜசேகரன், முன் தொகையாக 10 லட்ச ரூபாய் செலுத்துமாறு கேட்டுள்ளார்.

அதற்கு சிலை வாங்கும் நபர் போல் நடிக்கும் காவலர் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், ராஜசேகரன் வீட்டிற்கு பணத்துடன் சென்றுள்ளார். ராஜசேகரன் கையில் வைத்திருந்த ஐம்பொன் சிலையை காட்டியவுடன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பி ராஜாராம் தலைமையிலான படை சுற்றி வளைத்துப் பிடித்தது. அவரிடமிருந்து சிலையை மீட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்துள்ளனர்.

முதற்கட்டமாக பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் சிலை என்பது தெரியவந்துள்ளது. அதன் வடிவமைப்பை வைத்து சோழர்கால பிற்கால சிலையாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது என விசாரணை நடத்தி வருவதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் தெரிவித்துள்ளார். சிலைக்கு சொந்தமானவர்கள் அல்லது சிலைப்பற்றிய தகவல் தெரிவிக்க விரும்புவோர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 9498154500 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை சிலை மாயமானதாக கொடுக்கப்பட்ட புகார்கள் மற்றும் வழக்குகளில் இந்த சிலை குறித்து தகவல்கள் இல்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ராஜசேகரன் இந்த சிலையை விற்பதற்கு தரகராக செயல்பட்டார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சிலையை யாருக்காக விற்பனை செய்ய முற்பட்டார்.இந்த சிலையை கடத்திய கும்பல் யார் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இப்படிப்பட்ட சிலை கடத்தல் கும்பலுக்கு தொடர்புடையவர்களா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிலையை வெளிநாட்டிற்கு விற்கவும் திட்டமிட்டு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் இந்த சிலையின் மதிப்பு 30 கோடிகளைத் தாண்டும் என தெரியவந்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் உள்ள தமிழக சிலைகளை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet