Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இந்து நாடு அமைக்க தனித் தீவு வாங்கினாரா நித்தியானந்தா… எங்கே இருக்கிறார்… என்ன செய்கிறார்…?

0 Comments

Published on: Tuesday, December 3rd, 2019 at 9:25 PM

நடிகை ரஞ்சிதா தொடங்கி, தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கிவரும் நித்தியானந்தா, இந்து நாடு அமைப்பதற்காக ஈகுவடார் அருகே தனித் தீவையே விலைக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

கதவைத் திற காற்று வறட்டும் என்ற குமுதம் வார இதழில் வெளியான ஆன்மிகத் தொடர் மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமான நித்தியானந்தா, ரஞ்சிதா உடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளிவந்ததன் மூலம், பாலியல் சர்ச்சையில் சிக்கத் தொடங்கினார். அதன்பின்னர், தொடர்ந்து சர்ச்சை வெளிச்சத்திலேயே இருந்து வரும் நித்தியானந்தா, தன்னிடம் தனிச் செயலாளராக இருந்த சர்மா என்பவரது பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்றுவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து தலைமறைவாக உள்ளார்.

தனக்கென தனி நாடு, தனிக்கொடி, தனிச்சின்னம் என பயணித்து வரும் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பது அவரது சீடர்களுக்கே தெரியாத பரம ரகசியம்.. ஆனால், நாள்தோறும் தனது பேஸ்புக் பக்கத்தில் பேசுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரகசியத்தை வெளியிட்டு வருகிறார் நித்தியானந்தா. அவரது தனிநாடு கனவு இப்போது தொடங்கியதில்லை. பல ஆண்டுகளாக தனிநாடு முயற்சியை மேற்கொண்டுவருகிறார் நித்தியானந்தா.

இந்த நிலையில்தான், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் உள்ள தீவை நித்தியானந்தா விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கெனவே, கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்தியானந்தா, கிறிஸ்தவர்களுக்கு புனித நகரமாக இருக்கும் வாடிகன் போல, தனது இந்து மதத்திற்காக குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நித்தியானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளார். இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் நித்தியானந்தா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

தன்னை வாழும் சதாசிவன் என்று கூறிக் கொள்ளும் நித்தியானந்தா, கடந்த 2004ஆம் ஆண்டு சத்யசாயிபாபா, தனக்கு தங்கக்கிரீடமும், தங்கப் பாதுகைகளும் அளித்து தன்னை அவரது அவதாரமாக ஏற்றுக் கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும், தனது கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடிப் பேர் என்று பலரையும் வியக்க வைக்கும் வகையில் நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்.

தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா, தனி நாடு குறித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்,  இந்தியாவில் நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமம் இழுத்து மூடப்பட்டது. ஆசிரமத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட பிராணப்ரியா, பிரியதத்துவா ஆகிய பெண் சீடர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதால் இருவரையும் ஜாமினில் வெளியே விட குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

மேலும், கடத்தப்பட்டதாக சொல்லப்படும் சிறுமிகளை வரும் டிசம்பர் 10ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்து என்ன என்ற பரபரப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், இதை கண்டுகொள்ளாமல் தனது சீடர்களை அம்போவென விட்டுவிட்டதாக நித்தியானந்தா மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. நாள்தோறும் பேஸ்புக் பக்கத்தில் பேசும் நித்தியானந்தா, இதுகுறித்து வாய் திறப்பதே இல்லை. தான் தமிழில் பேசுவதற்கே அஞ்சுவதாகக் கூறி, அரைகுறை ஆங்கிலத்தில் உரையாற்றுவதையே தொடர்கிறார். பக்தர்கள் தான் பாவம்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet