Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கொரோனா காலம்: ஆசிரியர்களை மனநோயாளியாக்கும் தனியார் பள்ளிகள்!

1 Comments

Published on: Saturday, May 9th, 2020 at 8:09 PM

ஆசிரியர்களை மனநோயாளியாக்கும் தனியார் பள்ளிகள்: Private school treats teachers under pressure

கொரோனாவுக்கு பிந்தைய கல்வியாண்டு குழப்பங்களும், அழுத்தங்களும் நிறைந்ததாகவே இருக்கப்போகிறது. ஜூன் மூன்றாவது அல்லது கடைசி வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஜூலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன் லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. Zoom, Google Class Room, Skype போன்ற செயலிகள் வழியாக வகுப்புகள் நடக்கின்றன.

இந்த ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக பெரும்பாலான கல்வியாளர்கள், உளவியலாளர்கள் கூறுகிறார்கள். அதையே ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன. ஆனால், உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது. மேலதிகமாகச் சொல்வதென்றால், கல்வியாயளர்கள், உளவியலாளர்கள், ஆசிரியர்களின் துன்பங்களை பேச மறுக்கிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பாடநூல்கள், அதுதொடர்பான வீடியோக்கள், எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக, கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பாகின்றன. ஆனால், 95 சதவிகித மாணவர்கள் இதைச் சீண்டுவதே இல்லை.

அடுத்ததாக, தனியார் பள்ளி மாணவர்கள். 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஊரடங்கு காலத்திலும் ஆன் லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கேயே கல்வியில் சமச்சீர் என்ற பதம் காணாமல் போகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் தொடர்ச்சியாக மாதிரித் தேர்வு வைக்கின்றன. அதேபோல், 9-ம் வகுப்பு படிக்கு மாணவனை, அடுத்த பொதுத்தேர்வுக்கு இப்போதே தயார் செய்கின்றன. 12-ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களை முழுவீச்சில் தயார்படுத்தும் அதேநேரத்தில், தற்போது 11-ம் வகுப்பில் இருப்போருக்கு, 12-ம் வகுப்புப் பாடங்கள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.

இதில் ஆசிரியர்களின் பங்கு என்ன என பார்ப்போம்? ஒரு நாளைக்கு குறைந்தது 3 பாடங்களுக்கான (Subject), வீடியோவை ஒளிப்பதிவு செய்து,  குறிப்பிட்ட இடைவெளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும். பிறகு, அந்தப் பாடங்களுக்கான கேள்விகள் அனுப்பி வைக்கப்படும். அதற்கான விடையை பேப்பரில் எழுதி, அதை ஸ்கேன் செய்து மாணவர்கள் ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும்.  ஆசிரியர், அதை பதிவிறக்கம் செய்து, திருத்தி, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு செல்பேசி மூலமாகவே தேவையான திருத்தங்களை சொல்ல வேண்டும்.

இங்கிருந்துதான் ஆசிரியர்களுக்கு பெருமளவில் மன அழுத்தம் ஏற்படத் தொடங்குகிறது. எப்படி? 40 மாணவர்கள் உள்ள வகுப்பை கவனிக்கும் ஆசிரியர், குறைந்தது, 1,000 பக்கங்கள் அளவுக்கு விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது ஒரு வகுப்புக்கானது மட்டுமே. ஒரு கணித ஆசிரியர் மூன்று வகுப்புகளுக்கு பொறுப்பாக இருந்தால், அவர், குறைந்தது 5,000 பக்கங்கள் பதிவிறக்கம் செய்யக்கூடும். பொதுவாகவே, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளியில் செல்பேசி பயன்படுத்த அனுமதி கிடையாது. எனவே பெரும்பாலான ஆசிரியர்கள் மிகச்சாதாரண செல்பேசியை பயன்படுத்தி வரும் நிலையில், திடீரென, ஆயிரக்கணக்கான பக்கங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும், அரைமணி நேரத்துக்கு வீடியோ எடுத்துப்போட வேண்டும் என்பது எப்படி சாத்தியமாகும்?

ஆசிரியர்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்னை இது. அடுத்ததாக, பாடத்தை விளக்கி வீடியோ எடுக்க வேண்டும் என்றால், அதற்கு கரும்பலகை அவசியம். பெரும்பாலான பள்ளிகள் வீட்டில் தனி வகுப்புகள் நடத்த அனுமதிக்காதபோது, ஆசிரியர்கள் எதற்காக கரும்பலகை வைத்திருக்கப் போகிறார்கள்? இப்படி நடைமுறைச் சிக்கல்கள் உள்ள நிலையில், ஆன் லைன் வகுப்புகளில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதைக் கண்டறிந்து பெற்றோரிடம் ஆசிரியர்கள் கேட்கும்போது, சரியான ‘ஃபோன்’ இல்லை, ‘டாப் அப்’ செய்யும் நிலையில் பொருளாதாரம் இல்லை, பிள்ளைகள் ஏமாற்றுகிறார்கள் என்ற பதிலே கிடைக்கப்பெறுகிறார்கள். வாழ்வாதாரத்தை கொரோனா புரட்டிபோட்டிருக்கும்போது, பெற்றோர் கேட்பதும் சரிதானே? பிள்ளைகள் புகழ்மிக்க பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக, பெற்றோர் கடன் வாங்கி கட்டணம் செலுத்துகிறார்கள். ஊரடங்கு காலத்தில் விலையுயர்ந்த செல்பேசி வாங்க வேண்டும், அவ்வப்போது ‘டேட்டா ரீசார்ஜ்’ செய்ய வேண்டும் என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்?

பெற்றோர் எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தாலும், மாணவர்களை ஆன் லைன் வகுப்புகளுக்கு தேவையான கட்டமைப்புக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அரை மணிநேரம் அளவுக்கு பாடத்தை விளக்கி வீடியோ எடுப்பது, செல்பேசி மூலமாகவே பேப்பர்களை திருத்துவது, அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த ஆண்டு ஆகியவற்றுக்கு திட்டமிடுவது, பிள்ளைகளின் செயல்திறன் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்துவது என காலை தொடங்கி இரவு வரை ஆசிரியர்கள் இயந்திரங்களைப் போல சுழல வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கென வீடு, குழந்தைகள், கணவர், மனைவி என யாரையும், கவனிக்கவோ, அரவணைக்கவோ முடியாத நிலையில், அச்சம் என்ற இயல்பானதொரு உணர்ச்சி வருவது இயல்புதானே? இதுபோதாதா நோய்களுக்கான கதவுகளைத் திறக்க?

ஆன்லைன் வகுப்புகளில் பிள்ளைகளும், பெற்றோரும் ஆர்வம் காட்ட தவறும் நிலையில், நிர்வாகம் தரும் அழுத்தத்தால், மனரீதியாக பதற்றமடைவது ஆசிரியர்கள்தான். நாள்பட்ட பதற்றமானது, பயமாகவும், மன அழுத்தமாகவும் உருவெடுக்கும். இது ஒருபுறம் என்றால், குடும்பத்தை கவனிக்க முடியாததால் ஏற்படும் மன உளைச்சல் மறுபுறம். இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மனநோயாளி ஆவதோடு மட்டுமின்றி, நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற தொற்றோ நோய்களுக்கும் ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வகுப்பறைகளில் ஆவேச தேவதைகளாக ஆசிரியைகளோ, ஆசிரியர்களோ அவதாரம் எடுக்கும்போதுதான் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அதுமட்டுமல்ல, நண்பர்களோடு சேர்ந்து படிக்கவும் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். அதைவிடுத்து, மாணவர்கள், ஒரு மூலையில், ஆசிரியர் வேறு மூலையில் என போதிக்கப்படும் ஆன்லைன் கல்வி ஏட்டுச் சுரைக்காய்தான்.

வீட்டு வறுமை அல்லது கூட்டு வசதி இவற்றுக்காகவே தனியார் பள்ளிகளில் ஆசிரியைகள் பணி செய்கின்றனர். ஆனால், ஆன் லைன் வகுப்பு என்ற பூதம் மூலம் அவர்கள் கூட்டு மருத்துவம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதே நிதர்சனம். அழிவே இல்லாத செல்வம் கல்விச் செல்வம் என்றார் திருவள்ளுவர். அதைக்கூட, உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், பயிற்றுவிக்கவே முடியும் என்பதை நிர்வாகங்கள் உணர வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு மட்டுமே ஆன் லைன் வகுப்புகள் கைகொடுக்கும், பள்ளி மாணவர்களுக்கு அல்ல.

-“வேல்ஸ் மீடியா” கோபி, பத்திரிகையாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1COMMENTS