Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல்… உங்க ஊருக்கு எங்க போய் பஸ் பிடிக்கணும்னு தெரியுமா?

0 Comments

Published on: Friday, January 10th, 2020 at 1:07 PM

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே 12ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர் விடுமுறை காரணமாக முன்கூட்டியே நடைமுறைக்கு வந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வரும் 12ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாளை முதலே பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறை அறிவித்து விட்டதால், இன்று முதல் 14ஆம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4 ஆயிரத்து 950 பேருந்துகள் என மொத்தமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 7,175 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று பிற ஊர்களில் இருந்து 9,995 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு, கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய இடங்களில் நேற்றே தொடங்கிவிட்டது. இதற்காக 17 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக 9445014450, 9445014436 ஆகிய செல்போன் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும். திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

திருவண்ணாமலை, செஞ்சி, வந்தவாசி செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும். வேலூர், ஓசூர், தருமபுரி, பெங்களூரு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, விழுப்புரம், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இடங்களுக்கு பயணிகள் செல்வதற்கு போதிய அளவில் மாநகர பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet