1 Comments
Published on: Wednesday, August 5th, 2020 at 9:07 PM
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி – ஆச்சரியமூட்டும் தகவல்கள் இதோ…
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
அயோத்தியில் ராமர் அவதரித்ததாக கருதப்படும் ராமஜென்ம பூமியில் அவருக்கு பிரமாண்ட கோயில் கட்டுவதற்காக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லக்னோ வந்தடைந்தார்.
அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்த அவரை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். அங்கிருந்து கார் மூலம் ஹனுமன் கோயிலுக்கு வந்த மோடி, ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்ட வெள்ளி கிரீடம் அணிந்தபடி ஹனுமன் காட்சியளித்தார்.
தொடர்ந்து ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் சுவாமிக்கு மலர் மாலை அணிவித்து, காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர், கோயில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச் செடியை நட்டு வைத்தார்.
அதன்பின் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் இணைந்து அடிக்கல் நாட்டு விழாவிற்கான யாக பூஜையில் பங்கேற்றார். வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீராம ஜெயம் பக்தி கோசத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
கொரோனா அச்சத்தால் முக்கிய பிரபலங்கள், துறவிகள் உட்பட 175 பேர் மட்டும் பூமி பூஜை விழாவில் பங்கேற்றனர். பாபர் மசூதியை இடிக்க கரசேவகர்கள் முயன்றபோது, கலவரத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரமேஷ் பாண்டேவின் மனைவி காயத்ரி தேவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அடிக்கல் நாட்டு விழாவிற்காக நாடு முழுவதும் 2 ஆயிரம் ஆலயங்களில் இருந்து புனித மண் மற்றும் 100 நதிகளில் இருந்து புனித நீர் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பூமி பூஜை விழாவை தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமான பணியை எல் & டி நிறுவனம் உடனடியாக தொடங்க உள்ளது. சுமார் ரூ.300 கோடி செலவில் 3.5 ஆண்டுகளுக்குள் ராமர் கோயிலை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 67 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கரில் கோயிலும், 57 ஏக்கரில் வளாகமும் அமைக்கப்பட உள்ளது. நாகரா கட்டிடக் கலை முறையில் 3 அடுக்குகளாக கட்டப்பட உள்ள இந்த ஆலயத்தில், தரை தளத்தில் கர்ப்ப கிரகமும், முதல் தளத்தில் ராமர் தர்பாரை விளக்கும் ஓவியங்கள், சிலைகளும் இடம்பெற உள்ளது. முன்றாவது தளத்தில் பக்தர்கள் தங்கவும், கோயில் நிர்வாகிகள் அறையும் அமைக்கப்பட உள்ளன.
ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் கற்களாயே கட்டப்பட உள்ள இந்த ஆலயத்தில் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பேர் வரை தரிசிக்க முடியும் என்று கூறப்படுகிறது.