0 Comments
Published on: Thursday, August 20th, 2020 at 10:57 PM
ஆன்லைன் வகுப்பில் ஆபாச விளம்பரங்கள்… தமிழக அரசுக்கு யோசனை கூறிய உயர்நீதிமன்றம்..!
ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வகுப்புகளை, வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் தற்போது ஆன்லைனிலேயே மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச விளம்பரங்கள் வருவதை தடுக்க உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரே நாளில் 62 சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிந்த மத்திய அரசு ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதில்லை என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. நான்கு மணி நேர வகுப்புகள் நடத்தினாலும் அதன் பின் வழங்கப்படும் வீட்டு பாடங்களையும் கம்யூட்டர் மூலமே மாணவர்கள் செய்வதால் அவர்கள் கண்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது.
மனுதாரர்கள் வாதத்தை கேட்ட நீதிபதிகள் வகுப்புகள், வீட்டுப்பாடம் மற்றும் பாடத்திட்டத்தை குறைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தினர். மேலும், மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்து விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
No comments yet