0 Comments
Published on: Sunday, May 17th, 2020 at 6:52 PM
என்ன தான் ஆச்சு… தொடரும் சந்தேகங்கள்… உயிருடன் உள்ளாரா கிம்..?: North korea leader Kim jong un alive or not?
வடகொரியாவில் முன்னாள் அதிபர்களான கிம் இல் சங் மற்றும் கிம் ஜாங் இல் ஆகியோரின் உருவப்படங்கள் அகற்றப்பட்டிருப்பது கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்த சந்தேகங்களை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் தந்தை என்றழைக்கபடும் கிம் இல் சங்கின் பிறந்த நாளான ஏப்ரல் 15 அந்நாட்டின் முக்கிய நாட்களில் ஒன்று. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியன்று நடைபெற்ற கிம் இல் சங்கின் பிறந்த நாள் விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது, பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. கடைசியாக ஏப்ரல் 11ஆம் தேதி பொதுவெளியில் தோன்றிய கிம் ஜாங் உன், கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் வெளியுலகின் பார்வையில் படாத நிலையில் அவர் இறந்து விட்டதாகவும், இதய அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததால் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் பரவின.
இதையடுத்து சீனாவில் இருந்து சென்ற மருத்துவக் குழுவும் எதுவும் சொல்லாத நிலையில், மே ஒன்றாம் தேதியன்று பியாங்யாங் அருகில் நடைபெற்ற உரத்தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிம். ஆனாலும் ஒரு தரப்பினர் அது உண்மையான கிம் ஜாங் உன் இல்லையென்றும், அவரைப் போலவே தோற்றம் கொண்ட பாடி டபுள் என்றும் சந்தேகத்தை கிளப்பினர்.
இந்நிலையில் வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் உள்ள கிம் இல் சங் சதுக்கத்தில் கிம் இல் சங் மற்றும் கிம் ஜாங் இல் ஆகியோரது உருவப்படங்கள் திடீரென அகற்றப்பட்டிருப்பது புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அங்கு கிம்மின் படத்தை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஊகங்கள் வலம் வரத் தொடங்கியுள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த திடீரென படங்கள் மாற்றப்படுவதன் பின்னணி என்ன என்று உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த திங்களன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தின் படி கிம் இல் சங் சதுக்கத்தில் உயர் அதிகாரிகள் அமர்ந்து ராணுவ அணிவகுப்பை பார்வையிடும் அரங்கு இடிக்கப்பட்டுள்ளதாகவும், சதுக்கத்தின் மேற்குப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள தென்கொரிய ஊடகங்கள், கிம் இல் சங் சதுக்கத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளன. வரும் அக்டோபர் 10ஆம் தேதியன்று வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சி 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதையொட்டி நடக்கும் விழாவுக்காக சதுக்கம் புனரமைக்கப்படலாம் என்று ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
ஒரு புறம் கிம்மின் உடல்நிலை குறித்த சந்தேகங்கள் எழுந்து கொண்டிருக்க, மறுபுறம் அதிகாரத்தின் மீதான தன் பிடியை கிம் இறுக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் கிம்மின் பாதுகாப்புப் படை தலைவரும், இராணுவ உளவுப்பிரிவின் தலைவரும் மாற்றப்பட்டுள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது அந்நாட்டே வெளிப்படுத்தாத வரை, வடகொரியா மற்றும் கிம் ஜாங் உன்னை சுற்றி பல்வேறு சந்தேகங்கள் சுற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.
No comments yet