Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பார்சலில் மர்ம விதைகள்… உயிரி ஆயுதம் என எச்சரிக்கை அமெரிக்கா… தமிழகத்தில் ஆய்வு…!

0 Comments

Published on: Tuesday, August 11th, 2020 at 8:42 AM

பார்சலில் மர்ம விதைகள்… உயிரி ஆயுதம் என எச்சரிக்கை அமெரிக்கா… தமிழகத்தில் ஆய்வு…!

அமெரிக்கா, கனடாவில் மர்ம விதை பார்சல் வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் மர்ம விதைகள் வந்துள்ளதா என ஆய்வு நடத்த வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த சில நாட்களில் சந்தேகத்திற்கிடமான சில பார்சல்கள் வந்துள்ளன. சீனாவில் இருந்து வந்துள்ள அந்த பார்சல்களில், மர்ம விதைகள் இருப்பது தெரியவந்துள்ளது. என்ன இனம் என்றே கண்டுபிடிக்க முடியாத விதைகள் இருப்பதாகவும், இது விவசாயத்தை அழிக்கக்கூடிய உயிரி ஆயுதமாக இருக்கலாம் என்றும் அமெரிக்க வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, நம் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பார்சலில் வரும் மர்ம விதைகள் குறித்து மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இந்தியாவின் பல்லுயிர்ச் சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் மாநில அரசுகளை வேளாண் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து மாநில விவசாயத்துறை, மாநில விவசாய பல்கலைக்கழகங்கள், விதைச் சங்கங்கள், மாநில விதை சான்றிதழ் ஏஜென்சிகள், விதைக் கழகங்கள், இந்திய விவசாய கவுன்சில் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை மர்ம விதைகள் விவகாரத்தில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

அதேநேரத்தில், தமிழகத்தில் இதுவரை மர்ம விதைகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இருப்பினும் மாவட்டந்தோறும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்த உத்தரவிட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு விதை பரிசோதனை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மத்திய அரசின் எச்சரிக்கையால் விவசாயிகள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், பார்சலில் விதைகள் ஏதேனும் வந்தால் வேளாண்துறையை அணுகலாம் என்றும் வேளாண்துறை அறிவித்துள்ளது.

மர்ம விதைகள் பல்லுயிர்ச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறப்படுவதால், சந்தைகளில் அங்கீகரிக்கப்படாத விதைகள் விற்பனைக்கு வந்தால் வியாபாரிகளும், விவசாயிகளும் விழிப்புடன் இருந்து, வேளாண்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டியது அவசியம்.

ஏதோ விதை விலையில்லாமல் கிடைக்கிறது என நினைத்து, அதை பயன்படுத்தினால், எதிர்காலத்தில் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என வேளாண்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet