0 Comments
Published on: Wednesday, November 13th, 2019 at 10:12 PM
சென்னையில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்த தாய், மகன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாங்கி குவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வேலன் நகரில் கடந்த 4ஆம் தேதி பூட்டியிருந்த வீடுகளில் பட்டப்பகலில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியிருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் விசாரணையை கையில் எடுத்தனர் போலீசார்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் அரங்கேற்றப்பட்ட கொள்ளையால், தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை வேட்டையாட முடிவு செய்தனர் போலீசார். முதலில் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை உன்னிப்பாக ஆய்வு செய்தனர். அதில், கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் ஒரு இளைஞரும், அவருடன் ஒரு பெண்ணும் வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
வீட்டின் பூட்டை லாவகமாக உடைத்து உள்ளே செல்லும் அந்த இருவரும் நகை, பணத்தை திருடிய பின் ஒன்றாக செல்லும் காட்சிகள் போலீசாரின் கையில் சிக்கின. இதையடுத்து, அவர்கள் திரும்பிச் செல்லும் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்தபோது, அந்த பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருவரும் உள்ளே சென்று விட்டு, சிறிது நேரத்தில் வெளியே வரும் காட்சிகளும் இருந்தன.
இதுபோதாதா போலீசுக்கு…?! உடனடியாக களமிறங்கிய தனிப்படை காவல்துறையினர், குறிப்பிட்ட அலுவலகத்திற்குச் சென்று விசாரணையில் இறங்கினர். அப்போதுதான், அவர்கள் இருவரும் வேலை கேட்டு வந்தது தெரியவந்தது. இருவரும் முகவரி ஏதாவது கொடுத்துச் சென்றனரா என விசாரித்தபோது, செல்போன் நம்பர் மட்டுமே இருந்தது அவர்களிடம்.
அந்த செல்போன் எண்ணை வைத்துக் கொண்டு வழக்கமான முறையில் விசாரணை மேற்கொண்டபோதுதான், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கலவைப்பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பதும், தற்போது அவர் சென்னை வளசரவாக்கத்தில் குடியிருப்பதும் போலீசாருக்கு புலப்பட்டது. கொள்ளைக்காரி சிக்கிவிட்டாள் என வளசரவாக்கம் முகவரிக்குச் சென்று சாந்தியை சுற்றிவளைத்தபோதுதான் போலீசாருக்கு தெரிந்தது, அவருடன் இருந்தது அவரது 20 வயது மகன் நாகராஜ் என்று.
போலீசார் தங்களது வழக்கமான பாணியில் இருவரிடம் விசாரணை நடத்தியபோது, வளசரவாக்கம் வேலன் நகரில் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அப்போதுதான், வளசரவாக்கம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வேலை கேட்பது போல் நடித்து, அப்பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.
ஓரிரு நாட்கள் நோட்டத்திற்கு பிறகு, ஒரு நாளுக்குமேல் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நாகராஜ் கொள்ளையில் ஈடுபட, ஆட்கள் யாரும் வருகிறார்களா என வெளியில் நின்று பார்த்துக் கொள்வார் அருமைத் தாய் சாந்தி. கொள்ளையில் கைதேர்ந்த நாகராஜ் மீது காரைக்குடி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 26 திருட்டு வழக்குகளும், அவரது அருமைத் தாய் சாந்தி மீது 5 திருட்டு வழக்குகளும் இருப்பதாக கூறுகின்றனர் போலீசார்.
பிஞ்சிலேயே பழுத்த நாகராஜ் பலமுறை சிறார் குற்றவாளியாக சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு சென்று திரும்பியவர் என்றும், தாய், மகன் பல ஆண்டுகளாக கொள்ளை அடித்த நகை, பணத்தை வைத்து மதுரை மாவட்டம் ஆனைமலையில் வீடு ஒன்றை கட்டியுள்ளனர். மாமூல் கொஞ்சம் ஓவரு… என்ற வடிவேலு பாணியில் கொள்ளைப்பணம் ஓவர் என்பதால், மேல்மருவத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் வீடுகளை வாங்கிக் குவித்து, அதன்மூலம் வாடகை வசூல் வேட்டை வேறு.
போலீசாருக்கு பயந்து சென்னை, மதுரை, காரைக்குடி, திருவள்ளூர் என மாறி மாறி கொள்ளையை அரங்கேற்றிய இருவரும், வளசரவாக்கத்திலும் அதேபோல், வேலை கேட்பதுபோல் சென்றபோது, அங்கிருந்தவர்கள் போன் நம்பரில் இருந்து மிஸ்டுகால் கொடுக்கச் சொன்னது தான் அவர்கள் சிக்கியதற்கு தூண்டில்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 8 சவரன் நகைகள், ரூ.75,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இருவரையும் மதுரை, காரைக்குடி, திருவள்ளூர் மாவட்ட போலீசார் காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் துப்பு துலங்கும் என்றும், அவர்கள் வாங்கிய வீடுகளை பறிமுதல் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகின்றனர் போலீசார்.
No comments yet