Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கு.க.செல்வம் நீக்கம்… எம்.எல்.ஏ. பதவி ராஜினாமாவா?

0 Comments

Published on: Thursday, August 13th, 2020 at 10:08 PM

திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கு.க.செல்வம் நீக்கம்… எம்.எல்.ஏ. பதவி ராஜினாமாவா?

திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின், ஜானகி அணியில் இருந்த கு.க.செல்வம், பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். 1996க்குப் பின் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுக சார்பில் போட்டியிட்டு ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆன கு.க.செல்வம், திமுகவின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவிகளை வகித்து வந்தார். மாவட்டச் செயலாளராக பல முறை முயன்ற இவருக்கு, ஜெ.அன்பழகன் வலுவாக இருந்ததால் அந்த வாய்ப்பு தட்டிப்போனது.

ஜெ.அன்பழகன் மறைவிற்குப் பின் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அது சிற்றரசுக்கு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார். தொகுதி மேம்பாடு குறித்து பேச வந்ததாகவும், பாஜகவில் தாம் இணையவில்லை என்றும் கூறினார். திமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாகவும் விமர்சித்தார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கிய திமுக தலைமை, விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பியது.

இதனிடையே, ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடந்த பூஜைக்கு சென்ற கு.க.செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுகவில் தனக்கு ஏற்பட்ட நிலை மூத்த நிர்வாகிகளுக்கும் ஏற்படும் என்பதால், அனைவரும் பாஜகவில் வந்து சேருங்கள் என பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். மாற்று கட்சியினரை சந்திக்கக் கூடாது என திமுக கட்சி விதிகளில் இல்லை என்றும் கு.க.செல்வம் கட்சிக்கு விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக அவர் நீக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது கு.க.செல்வமே எதிர்பார்த்த ஒன்று என்றாலும், அவர் பாஜகவில் முறைப்படி இணையாதவரை எம்.எல்.ஏ. பதவிக்கு ஆபத்து இல்லை. இருப்பினும், மனசாட்சிப்படி, வேறு கட்சிக்கு சென்றுவிட்ட கு.க.செல்வம், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதுதான் சரி என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பதவி கிடைக்காத விரக்தியில் திமுகவில் இருந்து சென்ற கு.க.செல்வம், இருக்கும் எம்.எல்.ஏ. பதவியை விட்டுத் தருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet