Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கொரோனாவுக்கு ஆர்கானிக் பானம் – விலை வெறும் ரூ.28 தான்…

0 Comments

Published on: Tuesday, May 12th, 2020 at 9:23 PM

கொரோனாவுக்கு ஆர்கானிக் பானம் – விலை வெறும் ரூ.28 தான்: Madagascar President launches herbal cure for corona

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இந்திய மதிப்பில் வெறும் 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஆர்கானிக் பானத்தை உலக நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன.

கொரோனா வைரசால் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களே உயிரிழக்கின்றனர். அதை கருத்தில் கொண்டு, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர், கோவிட் ஆர்கானிக் என்ற மூலிகை பானம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்பதையும் தாண்டி கொரோனாவை குணப்படுத்தும் என்கிறார் மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரி ரஜோலினா. கடந்த மாத இறுதியில் கோவிட் ஆர்கானிக் பானத்தை அறிமுகம் செய்த அவர், அதை அருந்தி நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை விதைத்தார். இது artemisia என்ற ஒருவகை தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை பானம். இந்த தாவரத்தில் இருந்து மலேரியாவுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் கோவிட் ஆர்கானிக் பானம் அருந்துவதால் கொரோனா குணமாகும் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என கூறிவிட்டது உலக சுகாதார நிறுவனம்.

எந்த வித அறிவியல்பூர்வமான பரிசோதனைகளும் நடக்கவில்லை என்றும் அந்த அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதன் ஆப்பிரிக்க கிளையோ இது நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மட்டுமே என்கிறது. ஆனால், மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரி ரஜோலினா, இந்த பானத்தை வைத்து ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அதில் இருவர் குணமடைந்ததாகவும் கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து மடகாஸ்கரில் அரசே இலவசமாக மக்களுக்கு கோவிட் ஆர்கானிக் பானத்தை வழங்கி வருகிறது.

இதை அறிந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற ஆப்பிரிக்க நாடுகளும் மடகாஸ்கரிடம் கோவிட் ஆர்கானிக் பானத்தை இறக்குமதி செய்து வருகின்றன. தான்சானியா, காங்கோ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பானத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. உள்ளூர் மூலிகை பானம் என்பதால் விலை இந்திய மதிப்பில் வெறும் 28 ரூபாய்தான். ஆனாலும் சக ஆப்பிரிக்க நாடுகளுக்கு முதற்கட்டமாக இலவசமாகவே மடகாஸ்கர் அனுப்பி வைத்துள்ளது.

இந்த பானம் பற்றிய விரிவான ஆய்வு செய்ய உள்ளதாக ஆப்பிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த Max Planck ஆய்வு மையம் artemisia தாவரம் கொரோனாவை குணப்படுத்துமா என்று ஆய்வு செய்து வருகிறது. அவற்றின் முடிவுகள் வந்தபின்புதான், மடகாஸ்கர் அதிபர் சொன்னதுபோல இது கொரோனாவை குணப்படுத்துமா? அல்லது வெறும் புரூடாவா? என்பது தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet