0 Comments
Published on: Friday, January 3rd, 2020 at 10:12 PM
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 515 இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. தமிழக வரலாற்றில் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களிலும், திமுக கூட்டணி 272 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளன. அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 12 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 11 இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 19 இடங்களில், 14 இடங்களில் அதிமுகவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. எஞ்சிய 5 இடங்களில் மட்டும் திமுக வெற்றி பெற்றுள்ளதுகடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 29 இடங்களில் அதிமுக 14 இடங்களிலும், திமுக 15 இடங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளன.
கரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பத்தில் அதிமுக பின்னடவை சந்தித்தாலும், பின்னர் வேகமெடுத்தது. முடிவில், 9 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை அதிமுகவும், 3 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 பதவிகளில், அதிமுக, திமுக அணிகள் முறையே 6 மற்றும் 5 இடங்களில் வெற்றிக் கனியை ஈட்டியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களை திமுகவே தன்வசப்படுத்தியுள்ளது. அதாவது 23 இடங்களில் 15ல் திமுகவும், 8ல் மட்டும் அதிமுகவும் வெற்றி அடைந்துள்ளன. கொங்கு மண்டலமான கோவையில் மொத்தம் உள்ள 17ல் 12 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை அதிமுக வென்று அசத்தியுள்ளது. 5ல் மட்டும் திமுக கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், அதிமுகவும், திமுகவும் தலா எட்டு பதவிகளை சரிசமமாக பங்கீட்டுக் கொண்டன. முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுகவின் கையே ஓங்கியுள்ளது. மொத்தம் உள்ள 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 23 இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது .
23 இடங்களில் வெற்றி பெற்று தஞ்சை தமது கோட்டை என திமுக நிரூபித்துள்ளது. மொத்தம் உள்ள 28 இடங்களில் 5ல் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 11ல் அதிமுகவும், 7ல் திமுகவும் வெற்றி அடைந்துள்ளன. அந்த மாவட்டத்தில் மொத்தம் 18 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் ஆளும்கட்சியை திமுக பின்னுக்கு தள்ளியுள்ளது. திண்டுக்கல்லில் உள்ள 23 இடங்களில் 16ல் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. மற்ற 7ல் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திருச்சியில் மொத்தம் உள்ள 24 பதவிகளில், 19 இடங்களில் திமுகவும், 5 இடங்களில் அதிமுகவும் வெற்றி வாகை சூடியுள்ளன.
திருப்பூரில் அதிமுக 13 பதவிகளையும், திமுக 4 பதவிகளையும் கைப்பற்றியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக செங்கம் பகுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்தவில்லை. இம்மாவட்டத்தில் 24 இடங்களை திமுக தன்வசமாகியுள்ளது. திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களை திமுகவே கைப்பற்றியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 12 இடங்களிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் 7 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
நாகை, நாமக்கல், நீலகிரி மாவட்டங்களை பொறுத்தவரை, திமுக முறையே 15, 13, 5 ஆகிய இடங்களில் வெற்றி பெற்று, ஆதிக்கம் செலுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களை திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 இடங்களில் 7ல் திமுக வெற்றி பெற்றுள்ளது. மதுரையில் மொத்தம் உள்ள 23 இடங்களில் 14ல் திமுக கூட்டணியும், 9ல் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 இடங்களை திமுகவும், 5 இடங்களை அதிமுகவும் தன்வசப்படுத்தியுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 20 கவுன்சிலர் பதவிகளில் 13ல் அதிமுகவும், 7ல் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி அதிக அளவில் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியும் தங்களது இருப்பை தக்க வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
No comments yet