Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

செல்போனில் சார்ஜ் போட்டு தூங்கிய தாய்… குழந்தைகளுடன் பலியான பரிதாபம்..!

0 Comments

Published on: Tuesday, August 11th, 2020 at 9:18 AM

செல்போனில் சார்ஜ் போட்டு தூங்கிய தாய்… குழந்தைகளுடன் பலியான பரிதாபம்..!

கரூரில் இரவில் செல்போனை சார்ஜில் போட்டுத் துாங்கிய இளம்பெண்ணும் அவரது இரு குழந்தைகளும் தீவிபத்தில் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடம்பனேந்தல் பகுதியைச் சேர்ந்த கருப்பையா –  குப்பம்மாள் தம்பதி. இவர்களது 2வது மகள் 29 வயதான முத்துலட்சுமி. திருமணமான இவர் கணவர் மற்றும் குழந்தைகள் ரஞ்சித் (3), தட்சித் (2) ஆகியோருடன் கரூர் மாவட்டம் ராயனூரில் வசித்து வந்தார்.

ராயனூரில் முத்துலட்சுமியின் வீட்டிற்கு சென்றிருந்த பெற்றோர், ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு காரில், தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். திங்கள் அதிகாலையில், முத்துலட்சுமி வீட்டில் இருந்து புகை அதிகளவில் வெளியேறியுள்ளது.

அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது சோபாவில் முத்துலட்சுமி பாதி எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். குழந்தைகள் ரஞ்சித் மற்றும் தட்சித் இருவரும் கதவருகே சடலங்களாகக் கிடந்தனர். இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தீவிபத்து குறித்த திடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிறு இரவு இரண்டு மகன்களுக்கும் சாப்பாடு கொடுத்து விட்டு, அவர்களை தனி அறையில் படுக்க வைத்த முத்துலட்சுமி, சோபாவில் படுத்துக் கொண்டு,  செல்போனில் சார்ஜ் போட்டு வைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட மின்கசிவினால் சோபாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு முத்துலட்சுமி மயங்கிய நிலையில், சோபா எரிந்ததால், முத்துலட்சுமியின் உடலிலும் தீப்பிடித்து உயிரிழந்துள்ளார்.

குழந்தைகள் மூச்சுத் திணறால் கதவைத் திறக்க முற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். அவர்களுக்குத் தீக்காயமில்லை என்கின்றனர் போலீசார். முத்துலட்சுமிக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ராயனூரில் பேக்கரி நடத்தி வந்த பாலகிருஷ்ணன், தனியார் நிதி நிறுவனம் உள்ளிட்ட பல இடங்களில் அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரிக்கவே, மனைவி, குழந்தைகளை விட்டு வேலை தேடிச் செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

கணவர் வாங்கிய கடன்களில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அதிகளவில் இருந்ததால், அதை முடித்து விட திட்டமிட்டார் முத்துலட்சுமி. அதற்காக பெற்றோரின் சொந்த ஊரில் உள்ள சொத்தை விற்க முடிவு செய்து, ஞாயிறு இரவு அந்த வேலைக்காக பெற்றோரை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஞாயிறு இரவு தான் மின்கசிவால் கொடூர விபத்து ஏற்பட்டு முத்துலட்சுமியும் அவரது குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். கரூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள், கொரோனா காலம் என்று கூடப் பார்க்காமல் கடன் தவணையை வசூலிப்பதில் அதிக நெருக்கடி காட்டி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அந்த நெருக்கடிக்கு ஆளானதால்தான் முத்துலட்சுமியும் தனது சொத்தை விற்க தீர்மானித்துப் பெற்றோரை அனுப்பியுள்ளார். ஒருவேளை பெற்றோர் உடன் இருந்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது என்கின்றனர் உறவினர்கள். தாய், இரு குழந்தைகள் உயிரிழப்பு குறித்து,  தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனை சார்ஜில் போடுவது குறித்து பல விழிப்புணர்வு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. எனினும், ஒருவரின் அலட்சியத்தால் மூவரின் உயிர் பலியான சம்பவம், ராயனுாரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet