Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

”கையைப் பிடித்து இழுத்தார்… கட்டிப்பிடித்தார்…” இந்து மகாசபா தலைவர் மீது குற்றச்சாட்டை அடுக்கும் பெண் நிர்வாகி…

0 Comments

Published on: Friday, January 10th, 2020 at 12:50 PM

அனைத்திந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ மீது, அந்த அமைப்பின் மாநிலச் செயலாளரான பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பவுன்சர்களை வைத்துக்கொண்டு, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் ஈடுபடுவதாகவும் பகீர் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு அனைத்திந்திய இந்து மகாசபா என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் தேசியத் தலைவராக பதவி வகித்து வருபவர் 50 வயதான கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற ஸ்ரீகண்டன். இந்நிலையில் அனைத்திந்திய இந்து மகாசபாவின் மகளிர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்த 40 வயது பெண்மணி கோடம்பாக்கம் ஸ்ரீ மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், 2016ஆம் ஆண்டு அனைந்திந்திய இந்து மகா சபாவில் சேர்ந்து, அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததாக கூறியுள்ளார். சிறப்பாக செயல்பட்டதால் அவரை மாநில மகளிர் அணிச் செயலாளர் ஆக்கி உள்ளார் ஸ்ரீ. மகாசபா சார்பாக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அந்தப் பெண்மணி பங்கேற்று வந்துள்ளார்.
அனைந்திந்திய இந்து மகா சபா அமைப்பை நடத்திக்கொண்டிருந்த ஸ்ரீ, ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

நிலம் விற்பனையில் வரும் கமிஷன் தொகையில் ஒரு பங்கை அந்த பெண்மணிக்கு கொடுத்ததால் அவரும் ஆர்வமாக ரியஸ் எஸ்டேட் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அமைப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோடம்பாக்கம் ஸ்ரீ செல்லும்போது மொழி பெயர்ப்புக்காக அந்த பெண்மணியையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், அப்பெண்மணியின் வாழ்க்கையில் திடீர் என புயல் வீசத் தொடங்கியுள்ளது. அந்த புயல் வேறு யாருமல்ல ஸ்ரீதான்…

ஐ லைக் யூ என கோடம்பாக்கம் ஸ்ரீ வாட்ஸ்ஆப்பில் குறுச்செய்தி அனுப்பியதால் அதிர்ந்து போனதாக அந்தப் பெண்மணி அந்த புகாரில் தெரிவித்துள்ளார். ஏதோ விளையாட்டாக அனுப்புகிறார் என கண்டும் காணாமல் இருந்ததாகவும், ஆனால் தொடர்ந்து வாட்ஸ்ஆப் மூலம் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ய தொடங்கி விட்டதாக அப்பெண்மணி கூறியுள்ளார்.

அதன் பிறகு தனது கையைப்பிடித்து இழுப்பதும், கட்டிப்பிடிப்பதும் என அவர் எல்லை மீறிச் செல்லத் தொடங்கியதால் அதிர்ந்து போனதாகவும் கூறுகிறார் அந்த பெண்மணி. இதே போல், அனைத்திந்திய இந்து மகாசபா அமைப்பில் பணிபுரிந்த பல பெண்களிடம் ஸ்ரீ அத்துமீறிய தகவல் தனக்கு கிடைத்ததாகவும், இதை அடுத்து அந்த அமைப்பை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அப்பெண்மணி கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளார்.

ஆனால் தன்னை விடாமல் தொடர்ந்து ஸ்ரீ தொந்தரவு செய்ததாகவும், மீண்டும் அமைப்பில் இணைந்து பணியாற்றுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் அந்த பெண் கூறியுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பெண்மணியின் சகோதரர் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண செலவுக்காக, ரியல் எஸ்டேட் பணிக்காக தனக்கு கொடுக்க வேண்டிய பாக்கி கமிஷன் தொகையை தருமாறு கேட்டுள்ளார்.

பணத்தை தருவதாகவும், ஆனால் மீண்டும் அமைப்பில் இணைந்து பணியாற்ற வேண்டும் என கோடம்பாக்கம் ஸ்ரீ கட்டாயப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தம்பியின் திருமணத்திற்கு வந்தவர், உறவினர்களிடம் தனது நடத்தை பற்றி தவறாகவும், பணத்தை திருடிவிட்டதாகவும் கூறி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டதாக ஸ்ரீ மீது அளித்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும், அனைத்திந்திய இந்து மகாசபா அமைப்பின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ மீது நடவடிக்கை எடுப்பதுடன் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்திந்திய இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவராக இருந்துகொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் ஸ்ரீ பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தனக்கு கொலை மிரட்டல் உள்ளதாகக் கூறி போலீஸ் பாதுகாப்பை பெற்றுள்ள அவர், அடியாட்கள் போல் பவுன்சர்கள் புடைசூல வலம் வருவதாக கூறியுள்ளார்.ம்பவுன்சர்களை வைத்துக்கொண்டு ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, நிலம் கொடுக்க மறுப்பவர்களிடம் மிரட்டி வாங்குவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஸ்ரீ ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

பெண்மணியின் புகாரின் பேரில் கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற ஸ்ரீகண்டன் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்திந்திய இந்து மகாசபா அமைப்பின் தலைவர் மீது, அந்த அமைப்பின் மகளிரணிச் செயலாளராக இருந்தவரே பாலியல் மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet