Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தானா சேர்ந்த கூட்டம் ஸ்டைலில் சோதனை – அடுத்தடுத்து நடந்த அதிரடிகள்…

0 Comments

Published on: Monday, December 2nd, 2019 at 7:40 PM

தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில், திருப்பூரில் சிஐடி போலீஸ் எனக்கூறி மொத்த மளிகை வியாபாரியை மிரட்டி ரூ.3 லட்சம் அபகரித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் நகரம் அருகே ஓடக்காடு பகுதியைச் சேர்ந்த ருதாராம் சவுத்ரி என்பவர், அதே பகுதியில் மளிகைப்பொருட்களை வாங்கி, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள சிறிய கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு கடந்த வாரம் வந்த 6 பேர், தாங்கள் சிஐடி அதிகாரிகள் எனக் கூறினர். பின்னர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாகத் தகவல் கிடைத்துள்ளது என்றும், சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி மிரட்டியுள்ளனர்.

இதனால், பயந்துபோன ருதாராம் சவுத்ரி சோதனை நடத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்காத அவர்கள் உள்ளே சென்று சோதனை நடத்தினர். இந்த நேரத்தில் அவர்களில் ஒருவர், ருதாராம் சவுத்ரியை தனியாக சந்தித்து, சோதனையைக் கைவிட வேண்டும் என்றால், தங்களுக்கு ரூ.3.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்ததால், இந்த டீலிங்கிற்கு ருதாராம் சவுத்ரி ஒப்புக்கொண்டார். மேலும், மறுநாள் பணம் தருவதாக கூறியுள்ளார். இதை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. மறுநாள் வந்த அந்த கும்பலிடம் ருதாராம் சவுத்ரி ரூ.3 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார்.

மீதத் தொகை ரூ.50 ஆயிரத்தையும் உடனடியாக தரவேண்டும் என்றும் இல்லை என்றால் கடைக்கு சீல் வைத்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, மீண்டும் மறுநாள் ரூ.50 ஆயிரத்தை தருவதாக ருதாராம் சவுத்ரி கூறியுள்ளார். இருப்பினும், சிஐடி அதிகாரிகள் எனக் கூறியவர்கள் மீது சந்தேகம் அடைந்த ருதாராம் சவுத்ரி, அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

இதையடுத்து, போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரூ.50,000 பணத்தைக் கொடுப்பதாகக் கூறி, அவர்களை அனுப்பர்பாளையம் புதூர் பேருந்து நிறுத்தத்துக்கு ருதாராம் வரவழைத்தார். அப்போது அங்கு வந்த 3 போலி சிஐடி அதிகாரிகளை மறைந்திருந்த ஆய்வாளர் பி.என்.ராஜன் தலைமையிலான காவல்துறையினர் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மூவரும் அம்மாபாளையம் கணபதி நகரைச் சேர்ந்த சையது இப்ராஹிம், காங்கேயம் சாலை கே.வி.பி.காலனியைச் சேர்ந்த எஸ்.முகமது ஹனீபா, திருப்பூர் டைமண்ட் சாலையைச் சேர்ந்த ஏ.சாதிக் அலி என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ரூ.3 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், மளிகைக்கடையில் சோதனை நடத்தும்போது வந்த கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பாபு, ரகமதுல்லா, அஷ்ரப் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும், போதைப்பொருள் விற்பனை செய்ததால், சோதனை நடத்தாமல் இருக்க பணம் கொடுத்த ருதாராம் சவுத்ரியையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet