Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கர்நாடகாவில் கள்ளக்காதல்… கள்ளக்குறிச்சியில் கணவனைக் கொன்ற மனைவி…

0 Comments

Published on: Saturday, July 18th, 2020 at 11:24 AM

கர்நாடகாவில் கள்ளக்காதல்… கள்ளக்குறிச்சியில் கணவனைக் கொன்ற மனைவி…

கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, தூங்கும்போதே கழுத்தை நெறித்துக் கொலை செய்த மனைவி, பள்ளத்தில் தூக்கிவீசி விட்டு, காணவில்லை என நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கீழாத்துக்குழி கிராமத்தை சேர்ந்தவர்  குமாரசாமி மகன் தேவராஜ் (வயது 35). இவருக்கும் அருகிலுள்ள மட்டப்பாறை என்ற கிராமத்தை சேர்ந்த புஷ்பா(29) என்பவருக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் தேவராஜுக்கும் அவரது மனைவி புஷ்பாவும் தங்கள் குழந்தைகளை புஷ்பாவின் தாய் வீட்டில் விட்டுவிட்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பாலேனூர் என்ற ஊருக்கு கூலி வேலைக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு கூலி வேலைக்கு வந்திருந்த சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள கீரைக்கடை கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற இளைஞருடன் புஷ்பாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவரும் ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருப்பதை அறிந்த தேவராஜ் அவர்களை அங்கேயே கண்டித்துள்ளார். இதன்பிறகு தற்போது கொரோனா காலம் என்பதால், கர்நாடக மாநிலத்தில் வேலை இல்லை என கூறப்பட்டதால் அவரவர் தங்கள் சொந்த ஊருக்கு வந்து விட்ட நிலையில், தேவராஜும் புஷ்பாவும் கீழாத்துக்குழியில் தங்கள் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். தேவராஜுக்கு ஓட்டுநர் வேலை தெரியும் என்பதால் அவ்வப்போது லாரி ஓட்டும் வேலைக்கு சென்று விடுவார்.

இந்த நேரங்களைப் பயன்படுத்திக் கொண்ட புஷ்பா, தனது கள்ளக்காதலன் மணியை வீட்டுக்கு வரவழைத்து காதல் சரசங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை அறிந்த தேவராஜ், மனைவியை கண்டித்து அடித்து உதைத்துள்ளார். இதனால், தேவராஜை தீர்த்துக் கட்டினால்தான் தாங்கள் சந்தோஷமாக இருக்க முடியும் எனக் கருதிய கள்ளக்காதலர்கள், கொலை செய்ய திட்டமிட்டனர்.

கடந்த 2ஆம் தேதி இரவு புஷ்பா தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். கள்ளக்காதலன் மணி, தனது உறவினரான சேலம் மாவட்டம் அருணா கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை உதவிக்கு அழைத்துக்கொண்டு தேவராஜ் வீடு நோக்கி வந்துள்ளான். அப்போது தேவராஜ் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட புஷ்பாவும், கள்ளக்காதலன் மணியும், துணையாக வந்த சுரேஷ் என்பவனும் சேர்ந்து தேவராஜ் கழுத்தை நெரித்து, துணியை வாயில் திணித்தும் கொலை செய்துள்ளனர். இதன்பிறகு தேவராஜியின் உடலை கள்ளக்காதலன் மணி, தனது பைக்கில் எடுத்துக்கொண்டு, சுரேசுடன் வெள்ளி மலையில் இருந்து சேராப்பட்டு செல்லும் வழியில் பள்ளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

அடுத்த நாள் தேவராஜ் காணவில்லை எனக் கூறி புஷ்பா நாடகமாடிய நிலையில், கடந்த 7ஆம் தேதி வனப்பகுதி அருகே துர்நாற்றம் வீசியுள்ளது. அங்கு அழுகிய நிலையில் தேவராஜ் உடலை கண்ட கிராம மக்கள், மேல் நிலவூர் என்ற கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடல் அழுகி போயிருந்ததால் மருத்துவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்து அங்கேயே புதைத்து விட்டனர்.

இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவின்பேரில் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் கரியாலூர் போலீசார் மற்றும் கள்ளக்குறிச்சி குற்றப்பிரிவு போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததோடு, புஷ்பாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதோடு, லாரி ஓட்டும் வேலைக்குச் சென்ற கணவர், பின்னர் வீடு திரும்பவே இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் இணைந்து தேவராஜை  கொன்று வீசி விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, புஷ்பாவின் கள்ளக்காதலன் மணியையும் கைது செய்த போலீசார், கொலைக்கு உதவி செய்த சுரேஷ் என்பவனை தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் ஜோடி புஷ்பாவும் மணியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தகாத உறவினால் கணவரையே மனைவி தீர்த்துக் கட்டிய சப்பவம் கல்வராயன் மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– செய்தியாளர்: பொன்னுசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet