Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சூப்பர் ஓவர்… த்ரில் வெற்றி – தொடரைக் கைப்பற்றி இந்தியா புதிய சாதனை..!

0 Comments

Published on: Wednesday, January 29th, 2020 at 7:46 PM

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கி விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களையும், கேப்டன் விராட் கோலி 27 பந்துகளில் 38 ரன்களையும் விளாசினர்.

180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஆரம்பத்தில் ரன் குவிக்கத் திணறினாலும், அடுத்தடுத்து அதிரடி காட்டியது. கேப்டன் வில்லியம்சன் 48 பந்துகளில் 95 ரன்களை குவித்து, நியூசிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணியும் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்ததால், போட்டி டையில் முடிந்தது.

இதனால், வெற்றி – தோல்வியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 17 ரன் எடுத்தது. 18 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணி விளையாடியது. டிம் சவுத்தி வீசிய அந்த ஓவரில் முதல் 4 பந்துகளில் ரோகித்தும், கே.எல்.ராகுலும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

கடைசி 2 பந்துகளில் 10 ரன் தேவை என்ற நிலையில், 5வது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு, தனது அனுபவத்தை காட்டிய ரோகித் சர்மா, இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தாலே இந்திய அணி வெற்றிபெறும் என ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருந்த நிலையில், அந்த பந்தையும் சிக்சராக மாற்றி, வெற்றியை உறுதி செய்தார் ரோகித் சர்மா.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் முதல்முறையாக டி20 தொடரை கைப்பற்றிய சாதனையையும் படைத்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரோகித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet