Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மே.இ.தீவுகள் அணியை பழிதீர்த்த இந்தியா – குல்தீப் மீண்டும் ஹாட்ரிக் விக்கெட்…

0 Comments

Published on: Wednesday, December 18th, 2019 at 11:07 PM

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 107 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி குல்தீப் யாதவ் சாதனை படைத்தார்.

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி வந்த நிலையில், நேரம் செல்ல செல்ல ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன் குவித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா 159 ரன்னும், கே.எல்.ராகுல் 102 ரன் குவித்தனர். அதேபோல், ஸ்ரேயாஸ் 52, ரிஷப் பண்ட் 39 ரன் விளாசி, இந்தியாவின் ரன் குவிப்புக்கு உதவினர்.

388 ரன் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய அணியும் ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான லெவிஸ் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் நிதானமாக விளையாடி வந்த நிலையில் 30 ரன் எடுத்திருந்தபோது, லெவிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹெட்மயர் 4 ரன்னில் ஆட்டமிழக்க, சாசும் 4 ரன்னில் வெளியேறினார். ஆனால் மற்றொரு முனையில் நிலைத்து ஆடிய சாய் ஹோப் அரைசதம் விளாசினார். இதனால் 86 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி, எளிதில் வீழ்ந்துவிடும் என்ற நினைப்பு பொய்யானது. அதன்பிறகு வந்த பூரானும் அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட்டு, இந்திய வீரர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தினார்.

47 பந்துகளில் 75 ரன் எடுத்திருந்த பூரான், ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழாந்து வெளியேறியதும், மேற்கு இந்திய தீவுகள் அணியின் சரிவு தொடங்கியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்டு, தான் சந்தித்த முதல் பந்திலேயே ஷமியிடம் வீழ்ந்தார். அதன்பின்னர் நீண்ட நேரம் தாக்குப்பிடித்த சாய் ஹோப்பும் 78 ரன்னில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த பந்தில் ஹோல்டர் 11 ரன்னிலும், அதற்கடுத்த பந்தில் ஜோசப்பும் ஆட்டமிழந்ததால், குல்தீப் யாதவுக்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைத்தது. ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவுக்கு, இது இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட் ஆகும்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மேற்கு இந்திய தீவுகள் அணி, 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 280 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்தியா 107 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி, கட்டாக் நகரில் வரும் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet