0 Comments
Published on: Sunday, January 19th, 2020 at 10:00 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா 9 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று, தொடரை சமன் செய்தது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இருப்பினும், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன் எடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு கைகொடுத்தார். 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். கே.எல்.ராகுல் 19 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
சதம் கடந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா, 119 ரன் எடுத்திருந்தபோது, ஸம்பா பந்தில், ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் கேப்டன் விராட் கோலி அதிரடி காட்டிக் கொண்டிருந்தார். இந்திய அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விராட் கோலியும் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.
இப்போட்டியில் ரோகித் ஷர்மா 4 ரன்கள் அடித்த போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார். இந்த பட்டியலில் முதலிடத்தில் விராட் கோலியும், தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் டிவிலியர்ஸ் 2வது இடத்திலும் உள்ளனர்.
No comments yet