0 Comments
Published on: Friday, November 13th, 2020 at 11:53 AM
தீபாவளியன்று ஆரஞ்ச் அலர்ட்… மீண்டும் மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி…
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படாமல் இருப்பதால், மீண்டும் பெருவெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாகவும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, தற்போது இரண்டரை டி.எம்.சி. நீர் உள்ளது. ஆனால், ஏரி முறையாக தூர்வாரப்படாததால் ஆகாயத்தாமரை செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால், ஏரியில் நீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியை ஒரு மீட்டர் அளவிற்கு ஆழப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டே தொடங்கினாலும், அந்த பணிகள் ஆமை வேகத்திலேயே நடந்து வருகின்றன. இதனிடையே, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நவம்பர் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீபாவளி நாளன்று மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்டும் விடுத்துள்ளது. இதனால், ஏரிகள், நீர்நிலைகளை முறையாக கண்காணிக்க மாநில அரசுக்கு, மத்திய நீர்வள மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி முறையாக தூர்வாரப்படாமலும், ஆழப்படுத்தாமலும் உள்ள நிலையில், திடீரென மிக மிக கனமழை பெய்தால், 2015ஆம் ஆண்டு சென்னை நேர்ந்த கதி, மீண்டும் ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
No comments yet