1 Comments
Published on: Wednesday, July 29th, 2020 at 10:14 AM
உங்க வீட்டில் இட்லி பொடியை ஒருமுறை இப்படி அரைச்சு பாருங்க… கடையில் இனி வாங்கவே மாட்டீர்கள்…
இட்லி பொடி என்றாலே, அது கடையில் வாங்கினால்தான் மணமாக, சுவையாக இருக்கும் என்பது நம் வீட்டில் இருப்பவர்களுடைய கருத்து. இதேபோல் தான், ஓட்டலில் வைக்கும் இட்லி பொடியும், மிகவும் சுவையோடு இருக்கும். வீட்டில் நம் கையால், செய்த இட்லி பொடியை நம் வீட்டில் இருப்பவர்கள் திருப்தியாக சாப்பிடவே மாட்டார்கள்.
கடையில் இருக்கும் அதே சுவையோடு, நம் வீட்டிலும், ஒரு சூப்பர் இட்லி பொடியை தயார் செய்ய முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இட்லி பொடியை அரைப்பதற்கு, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவும், வறுபடும் பக்குவமும் தான் மிகவும் முக்கியம். சேர்க்கப்படும் பொருட்களின் அளவு மாறினாலும், சிவக்கும் தன்மை மாறினாலும், பொடியின் ருசி பக்குவமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இட்லி பொடி அரைக்க தேவையான பொருட்களின் சரியான அளவு இதுதான்
கடலைப் பருப்பு – 100 கிராம், உளுந்து – 100 கிராம், பெருங்காயம் – 10 கிராம், பூண்டு – 10 பல் (தோல் உரிக்க வேண்டாம்) எள்ளு – 60 கிராம், காஷ்மீரி மிளகாய் – 30 கிராம், காய்ந்த மிளகாய் – 6, கறிவேப்பிலை – 2 கொத்து, கல் உப்பு – 1 ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்.
தடிமானான கடாயை அடுப்பில் வைத்து, முதலில் கடலைப்பருப்பை சிவப்பு நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக உளுந்தம்பருப்பை கொட்டி சிவப்பு நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு பருப்பையும் தனித்தனியாக தான் வறுக்க வேண்டும். பிறகு அகலமான பாத்திரம் அல்லது காகிதத்தில் கொட்டி நன்றாக ஆற வைத்து விடுங்கள்.
அடுத்ததாக அதே கடாயில், வரமிளகாயை மொறுமொறு வென்று, உடையும் பக்குவத்திற்கு வறுக்க வேண்டும். எள்ளையும் படபட வென்று, வருபடும் அளவிற்கு, வறுத்து காய்ந்த மிளகாயோடு சேர்த்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
அதே கடாயில், மீதமுள்ள பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக சேர்த்து, பொன்னிறமாக, தனித்தனியாக வறுக்க வேண்டும். பெருங்காயம், பூண்டு, கருவேப்பிலை, உப்பு, சீரகம், வர மல்லி, இந்த பொருட்களை தனித்தனியாக வறுத்துதான் ஒரே கிண்ணத்தில் போட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். (வறுத்த பின்பு ஒன்றாக சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்)
இப்போது எப்படி அரைக்க போகின்றோம் என்பதையும் பார்த்துவிடலாம். அரைப்பதில் கூட பக்குவம் உள்ளது முதலில் மிக்ஸியில் வறுத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பையும், உளுந்தம் பருப்பையும் முதலில் நறநறப்பாக அரைத்து தனி பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். அதே மிக்ஸியில் இரண்டாவதாக காய்ந்த மிளகாய், எள், பொட்டுக்கடலை இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாகப் போட்டு அரைத்து தனியாக கொள்ள வேண்டும்.
அதே மிக்ஸியில் மூன்றாவதாக தனியாக வறுத்து வைத்திருக்கும் பெருங்காயம், பூண்டு, எள்ளு, சீரகம், வரமிளகாய், மல்லி, உப்பு இந்த பொருட்களை போட்டு ஒரு ஓட்டு ஓட்டிவிட்டு, இப்போது அரைத்து வைத்திருக்கும்,உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு பொடியையும், மிளகாய் எள்ளு பொடியையும், ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து உங்களுக்கு தேவையான பக்குவத்தில் அரைத்து எடுத்தால் வாசனையான இட்லி பொடி தயார்.
இந்த முறையைப் பின்பற்றி பாருங்கள்… இனி கடையில் இட்லி பொடி வாங்கவே மாட்டீர்கள். அப்படி வாங்கினாலும், நீங்கள் தயார் செய்ததைப் போல சுவையாக இருக்காது.