Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தொடரும் கனமழை… புயல் உருவாக வாய்ப்பு… எந்தெந்த மாவட்டங்களில் நாளை விடுமுறை?

0 Comments

Published on: Monday, December 2nd, 2019 at 8:46 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை தொடரும் நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துக் கிடந்த சென்னை மக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தாலும், பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

சிறிய சாலைகள் மட்டுமின்றி, நெடுஞ்சாலைகள் கூட பள்ளம் மேடுமாக இருக்கும் நிலையில், 2 நாட்களாக பெய்த கனமழையால் சாலைகள் மேலும் சேதமடைந்து, அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை அறியாமல் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர்.

இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ள மக்களுக்கு இப்போதே கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளம் நினைவுக்கு வந்துவிட்டது. வணிக வளாகங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும், இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

அதாவது, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அவ்வபோது மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையத்தின் கணிப்பால், மேற்குறிப்பிட்ட 15 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விட்டபோதும், வானிலை மைய கணிப்பின்படி மழை பெய்யாததால், நாளை விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை. இதனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராகுங்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன், ஒருசில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவித்தார். இதனால், சென்னை மக்கள், நல்ல மழைக்கு மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். பள்ளி விடுமுறைக்கும்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet