0 Comments
Published on: Friday, August 7th, 2020 at 10:11 PM
எழுத்தின் மீது காதல்… எழுத்தாளராகவே வாழ்ந்து மறைந்த கலைஞர்… 90 வயதிலும் சாதனையாளர்…
மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்படும் நிலையில், அவர் எழுத்தின் மீது கொண்டிருந்த காதலை தெரிந்து கொள்ளலாம்.
எழுத்தின் மீது கலைஞருக்கு இருந்த தீரா காதல் சிறு வயதிலேயே வர தொடங்கிவிட்டது. அரசியல், சினிமாவுக்கு முன்பே 12வயதில் மாணவ நேசன் என்ற கையெழுத்து பிரதியை தொடங்கி, பொது வாழ்க்கையை எழுத்தில் இருந்தே ஆரம்பித்தார் கலைஞர். மாணவ பருவத்திலேயே அரசியலுக்கு வந்த கலைஞருக்கு, இந்தி எதிர்ப்பு, திராவிட இயக்க ஈர்ப்பு போன்ற காரணங்களால் தமிழ் பற்று இயல்பிலேயே மிகுந்திருந்தது.
அந்த சிறு வயதில் தான் உள்வாங்கி கொண்டவைகளை எழுத்துகளாலும், கார்ட்டூன்களாலும் எழுதி நண்பர்கள் உதவியுடன் மாணவ நேசன் பத்திரிகையை வெளியிட்டார். தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் காலத்தில் முரசொலி இதழை துண்டு பிரசுரமாக வெளியிட்டு வந்தார். பின்னர் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி தனது 18வது வயதில் முரசொலி இதழை தொடங்கினார்.
“எனது முதல் குழந்தை முரசொலி” என சொல்லும் அளவுக்கு முரசொலியை தனக்கு இணக்கமானதாக கருதினார் கலைஞர். உலகப்போர் சூழலில் காகிதம் கிடைக்காத காலத்தில் சில காலம் நிறுத்தப்பட்டிருந்த முரசொலி 1948ஆம் ஆண்டு முதல் திருவாரூரில் இருந்தும், 1954ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருந்தும் வார இதழாக வர தொடங்கியது. பின்னர் 1960ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாளிதழாக வந்துக்கொண்டிருக்கிறது.
ஈரோட்டில் பெரியார் நடத்திய குடி அரசு பத்திரிகையில் சிறிது காலம் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்த கலைஞர், யாரையும் எளிதில் பாராட்டாத சுபாவம் கொண்ட பெரியாரிடம் பல கட்டுரைகளுக்கு பாராட்டை பெற்றவர். அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு இதழிலும் பல்வேறு கட்டுரைகளை கலைஞர் எழுதியுள்ளார்.
சேரன், கரிகாலன், மூனாகானா என பல்வேறு புனைப்பெயர்களில் முரசொலியில் எழுதி வந்த கலைஞர், கார்ட்டூன் மூலம் எதையும் எளிதில் விளக்குவதில் சிறந்து விளங்கினார். எமர்ஜென்சி காலத்தில் வரைந்த கார்ட்டூன், அமெரிக்காவின் நியூஸ் வீக் இதழில் வெளியானதே அவருடைய திறமைக்கு சாட்சி. பின்னாளில் கார்ட்டூன் சரியில்லை என நண்பர்கள் கூறியதால், இனி நான் கார்ட்டூன்கள் வரைய மாட்டேன் என கலைஞர் தெரிவித்ததாக கூறுவதுண்டு.
முரசொலியில் வெளியான கட்டுரைகளுக்கு பல்வேறு நிலைகளிலும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளார் கலைஞர். சிதம்பரத்தில் நடைபெற இருந்த வருணாசிரம ஆதரவு மாநாட்டை கண்டித்து கடுமையாக எழுதியிருந்த அவருக்கு சிதம்பரம் நகருக்குள் நுழைய சில காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
திராவிட நாடு ஏட்டில் அண்ணா எழுதி வந்த அன்பு தம்பிக்கு என்ற கடித பாணியிலான கட்டுரையை பின்பற்றி, கலைஞர் எழுதிய உடன்பிறப்பே கடிதம் அவருக்கும் தொண்டர்களுக்கும் இடையேயான பிணைப்பை உறுதியாக்கியது. சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை தொண்டர்களுக்காக எழுதியுள்ளார். உலகளவில் நீண்ட நாட்களாக வெளிவந்த கட்டுரைத் தொடர் என்ற பெருமையையும் இந்த தொடர் பெற்றுள்ளது.
விருப்பமில்லாத கூட்டணி, கட்சியில் விருப்பமில்லாத நிர்வாகிகளுக்கு பதவி என எப்போதாவது திமுக தொண்டர்களுக்கு ஏற்படும் மனகசப்பை, மறுநாள் முரசொலியில் தகுந்த விளக்கங்களுடன் வரும் உடன்பிறப்பே கடிதம் நிச்சயம் மறக்கடித்து விடும். இதேபோல், முரசொலியில் வெளிவந்த கேள்வி – பதில் அறிக்கை என்ற புதிய பாணி மூலம், எளிதாக தான் சொல்ல வேண்டிய கருத்துகளை எடுத்துத்துரைத்தார்.
அவசரநிலை பிரகடனத்தின் போது, எழுத்து மூலம் புது ருத்ரதாண்டவத்தையே ஆடினார் கலைஞர். முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் என நெருக்கமானவர்களின் கைது, ஆட்சி கலைப்பு, கட்சிக்கு நெருக்கடி என அனைத்தையும் முரசொலி என்ற ஒற்றை ஆயுதத்தை கொண்டு சமாளித்தார். எமர்ஜென்சியின் போது நாளிதழ்கள் தணிக்கை செய்யப்படுவதை கிண்டல் செய்யும் விதமாக வெண்டைக்காய் உடலுக்கு நல்லது, விளக்கெண்ணெய் உடல் சூட்டை தணிக்கும் போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் பிரசித்தி பெற்றவை.
12வது வயதில் தொடங்கி 90 வயதை கடந்தும் பத்திரிகையாளராக பணியாற்றிய பெருமையும் கலைஞருக்கு உண்டு. பத்திரிகை துறை போலவே தனது விருப்பமான இலக்கியத்துறையை எப்போதும் அவர் புறக்கணித்தது இல்லை.
கவியரங்க கூட்டங்கள், தூக்குமேடை, ஒரே ரத்தம் போன்ற சமூக கதைகள், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பொன்னர் சங்கர், உள்ளிட்ட சரித்திர நாவல்கள் என இலக்கிய உலகில் இடைவிடாமல் இயங்கினார் கலைஞர். திருக்குறளுக்கு விளக்க உரையாக எழுதிய குறளோவியம், தொல்காப்பிய உரை போன்றவை காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும்.
திருக்குறள் மீது தீராத பற்றுக்கொண்ட கலைஞர், திருக்குறளுக்கு உரை மட்டுமில்லாமல், ஒவ்வொரு குறளுக்கும் ஒரு சிறுகதை என குறளோவியத்தையும் படைத்தார். இதேபோல் சிலம்பு நாயகியாம் கண்ணகி மீதும் பற்றுக்கொண்டிருந்தார் கலைஞர்.
இதுமட்டுமில்லாமல் கலைஞர் சுயசரிதையாக எழுதிய நெஞ்சுக்கு நீதி 5 பாகங்களும், அவரின் தொண்டர்களுக்கு புனித நூலாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.
No comments yet