0 Comments
Published on: Saturday, August 22nd, 2020 at 10:03 AM
கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்த இளைஞர்… அடுத்தடுத்து குடும்பமே பலியான பரிதாபம்..!
தேனி மாவட்டத்தில், கொரோனா தொற்று பயம் காரணமாக மூத்த மகன் தற்கொலை செய்ததால், அவரது குடும்பமே அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – ராமலட்சுமி தம்பதி. மணிகண்டன், ஆண்டிப்பட்டி பாரத ஸ்டேட் வங்கி அருகில் துணிக் கடை நடத்தி வந்த நிலையில், அவருக்கு வசந்த், சசிக்குமார், குருபிரசாத் ஆகிய 3 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் வசந்த், தந்தைக்கு உதவியாக துணிக்கடையில் இருந்த நிலையில், இரண்டாவது மகன் சசிக்குமார், மும்பையில் தனியா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பிய சசிக்குமாருக்கு தேனி மாவட்ட சோதனைச் சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டு போடி தனியார் கல்லூரியில் 15 நாட்கள் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பரிசோதனை முடிவு வராத நிலையில், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ என்ற பீதியில் மே மாதம் 17ஆம் தேதி முகாமிலேயே சசிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் இறந்த பின் வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. மகனது தற்கொலையால் அதிர்ச்சியடைந்த தாய் ராமலட்சுமி உடல் நலிவுற்று கடந்த செவ்வாய் அன்று உயிரிழந்தார். மகனும் மனைவியும் அடுத்தடுத்து மறைந்ததால் விரக்தி அடைந்த மணிகண்டனும், வசந்தும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். புதன்கிழமை காலை 6 மணியளவில், வீட்டில் இருந்து இருவரும் கடைக்கு சென்று ஷட்டரை இழுத்து விட்டு உள்ளே மின்விசிறியில் ஒரே துணியில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
அரைகுறையாக திறந்து கிடந்த கடையை அக்கம்பக்கத்தினர் பார்த்துபோதுதான் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினர் அடுத்தடுத்து உயிரிழந்ததால், மணிகண்டனின் கடைசி மகனான 13 வயது குருபிரசாத் ஆதரவுக்கு யாருமின்றி நிர்க்கதியாக நிற்கும் சம்பவம், சுப்புலாபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் கொரோனாவால் யாரும் தேவையற்ற பீதி அடைய வேண்டியதில்லை என்றும் வாழ்வையே முடித்துக் கொள்ளும் அளவுக்கு விபரீத முடிவுகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments yet