Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சரவணா ஸ்டோர் நகைக்கடையில் போலி தங்கம் விற்பனையா? ஒரு கோடி கேட்டு மிரட்டியவர் கைது…

0 Comments

Published on: Saturday, November 16th, 2019 at 1:51 PM

சென்னையில் சரவணா ஸ்டோர் நகைக்கடையில் போலி நகைகள் விற்பதாகக்கூறி ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய 9 பேர் கொண்ட கும்பல் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

சென்னை திருவேற்காடு சுந்தராசோழபுரத்தைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் தங்க நகைக்கடையில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி, தனது பழைய நகைகளை கொடுத்து விட்டு, 3 சவரன் தங்க சங்கிலியை வாங்கியுள்ளார். சங்கிலியை வாங்கிக் கொண்டு சென்ற தனசேகரன், சில மணி நேரத்தில் திரும்பி அதே கடைக்கு வந்துள்ளார். தான் வாங்கிச் சென்ற தங்கச் சங்கிலியின் கொக்கி உடைந்து விட்டதாக கூறியுள்ளார். அதை நகைக்கடை ஊழியர்கள் சரிசெய்ய முயன்றபோது, சங்கிலியின் உள்ளே இருந்து மிகச் சிறிய அளவிலான சில வெள்ளி உருண்டைகள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலியான நகையை தன்னிடம் விற்பனை செய்துவிட்டதாகக் கூறி வாடிக்கையாளர்கள் பலர் இருந்தபோதே சத்தம் போட்டுள்ளார்.

இந்த நகை தரம்குறைந்த போலி நகை என்பதற்கான சான்றிதழும் தம்மிடம் இருப்பதாகக் கூறி, அதையும் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன நகைக் கடை ஊழியர்கள், நகையை மாற்றித் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை ஏற்காத தனசேகரன், தரமற்ற போலி நகையை கொடுத்துவிட்டதால், தனக்கு இழப்பீடுதான் வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடையில் ஏராமான வாடிக்கையாளர்கள் இருந்ததால், அவரை ஊழியர்கள் சமாதானப்படுத்த முயற்சித்துள்ளனர்.

ஆனால் சமாதானமாகாத தனசேகரன், தான் பிரபல பத்திரிகையில் வேலை பார்ப்பதாகவும், போலி நகைகளை விற்பதாக நகைக்கடை பற்றி செய்தி வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். வெளியில் சொல்லாமல் இருக்க ரூ.1 கோடி பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். அப்போது நிலைமையை சமாளிக்க கடையில் இருந்த நிர்வாகிகள் ரூ.15 லட்சத்தை கொடுத்து தனசேகரனை சமாதானம் செய்துள்ளனர். அதை வாங்கிக் கொண்டு அமைதியாக சென்ற தனசேகரன், நகைக்கடை நிர்வாகத்தினர் பயந்துவிட்டதையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.

இதனால், அடுத்தடுத்த நாட்களில் தனது நண்பர்களுடன் சென்று அந்த நகைக்கடையில், மீண்டும் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளார் தனசேகரன். என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள்,  உரிமையாளரிடம் சொல்லாமல் சமாளிக்க முயற்சித்து வந்துள்ளனர். கடந்த புதன் கிழமை இரவு, மீண்டும் சரவணா ஸ்டோர் நகைக்கடைக்கு, தனது நண்பர்கள் 15 பேருடன் சென்ற தனசேகரன், ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டத் தொடங்கினார்.

அரண்டுபோன நிர்வாகிகள், நிலைமை கைமீறிச் சென்றுவிட்டதை உணர்ந்து, உரிமையாளர் சிவா அருள் துரை கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றனர். ஆனால், அவரோ தனசேகரனிடம் எதுவுமே பேசாமல், மிரட்டல் தொடர்பாக தியாகராய நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சரவணா ஸ்டோர் தங்க நகைக்கடைக்கு வந்த போலீசார், தனசேகரையும், அவரின் நண்பரான அரசியல் கட்சி பிரமுகர் ஜீவா, வழக்கறிஞர்கள் ஜெகதீசன், அமானுல்லா, ஸ்ரீராம், முருகன், திருமலை, தனியார் கணக்கு பதிவாளர் சையத் அபுதகர் மற்றும் ஓட்டுநர் தண்டபாணி ஆகிய 9 பேரையும் கொத்தாக தூக்கிச் சென்றனர்.

காவல்நிலையத்தில் தங்கள் பாணியில் விசாரித்த போலீசார், 9 பேரிடமும் இருந்து போலியான காவல்துறை அடையாள அட்டை, 4 ஊடக நிறுவனங்களின் அடையாள அட்டை உட்பட பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தனசேகரன் உடன் வந்த அரசியல் கட்சி பிரமுகர் ஜீவா வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கி மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த 9 பேரும் இதே போல் வேறு எங்கும் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தரமற்ற, போலி நகைகளை விற்பதாக சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது புகார் அளிக்க தியாகராய நகர் காவல்நிலையத்திற்கு வந்த தங்களை, போலீசார் கைது செய்துவிட்டதாக கைதான தனசேகரன் தரப்பினர் விளக்கம் அளித்தனர்.

போலி நகைக்காக பணம் கேட்டு மிரட்டிய தனசேகரன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த போலீசார், போலி நகை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet