0 Comments
Published on: Sunday, August 9th, 2020 at 6:57 PM
விடுதலையாகும் சசிகலா… சரண்டர் ஆக காத்திருக்கும் எடப்பாடி? மீண்டும் உடையும் அபாயத்தில் அதிமுக…!
சசிகலா விடுதலையாக உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலாவும் விரைவில் விடுதலையாக உள்ளார். இதனால், இப்போதே அதிமுகவில் சலசலப்பு தொடங்கிவிட்டது. எங்கு இருந்தால் நமக்கு பாதுகாப்பு என்று அதிமுகவில் இருக்கும் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் வரை யோசித்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக, அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைவதை ஓ.பி.எஸ். விரும்பவில்லை எனக் கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி வேறு ஒரு திட்டத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதன் காரணமாகவே, ஜெயா டிவி நிர்வாக இயக்குநர் விவேக் ஜெயராமன் மூலம், சசிகலாவிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம்.
தொடக்கத்தில் இருந்தே ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.க்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனாலேயே, எந்த சூழ்நிலையிலும் ஓ.பி.எஸ்.சிடம் அதிகாரம் சென்றுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன்னை பெரும்பாலும் முன்னிறுத்திக் கொள்வதோடு, ஓ.பி.எஸ்.ஐ ஆரம்பத்தில் இருந்தே ஓரங்கட்டுவதை கமுக்கமாக செய்து கொண்டே வருகிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
பாஜகவால்தான் சசிகலா சிறைக்குச் சென்றார் என்பதால், பாஜக மீது உள்ள கோபம் சசிகலாவுக்கு இன்னும் குறையவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி நன்கு அறிந்து வைத்துள்ளாராம். எனவே சசிகலா வெளியே வருவதற்குள் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற முடிவு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அதன் முதல்படியாகவே, மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, பாஜகவுடன் மோதல் போக்கை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, மோடியுடன் நெருக்கமான இருக்கும் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பாஜகவினரையும் மட்டம் தட்ட ஆரம்பித்துவிட்டார்.
இதை அறிந்து கொண்ட பாஜக தலைமையும், அதிமுக அரசின் தவறுகளை துணிந்து விமர்சனம் செய்யுங்கள், கூட்டணி தர்மம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை என தமிழக பாஜகவுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாகவே, அண்மையில் அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை பாஜக முன்வைக்கிறது. ஆனால், அதிமுகவில் இருக்கும் ஓ.பி.எஸ். தரப்பினர் பாஜக பற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பி.எஸ். தரப்பை கட்சியில் இருந்து ஓரங்கட்டிவிட்டு, சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளவும், இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கவும் எடப்பாடி தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா வெளியில் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதிமுக மீண்டும் இரண்டாக உடையும் என கட்சியினர் சிலர் கூறுகின்றனர்.
எடப்பாடியின் இந்த வியூகங்களை தெரிந்து கொண்ட ஓ.பி.எஸ்., அதிமுகவை இரண்டாக உடைத்து, பாஜகவில் இணைய இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
No comments yet