0 Comments
Published on: Thursday, August 6th, 2020 at 1:32 PM
தூத்துக்குடி திமுக எம்.எம்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைய முடிவு?
கு.க.செல்வத்தை தொடர்ந்து தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில், ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார். அத்துடன், திமுகவில் இருப்பவர்கள் பாஜகவில் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனும் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2001ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவருக்கு, அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பதவியை கொடுத்து அலங்கரித்தார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி, ஜெயலலிதாவே நீக்கியதால் 2011ல் திமுக இணைந்த அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுகவிலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி நீக்கப்பட்டதால், அதிமுகவுக்கு சென்று, பின்னர் அங்கிருந்து மீண்டும் திமுகவுக்கு திரும்பிச் சென்றார்.
2016 தேர்தலில் திமுக அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தபோது, அப்போது தூத்துக்குடி தொகுதியில் நடிகர் சரத்குமாரை தோற்கடித்து, வெற்றிபெற்றார். இவர் இதுவரை திமுக, அதிமுக என மாறி மாறி கட்சி தாவியுள்ளார். இந்த நிலையில், அவர் தற்போது பாஜகவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீதான வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக பாஜக தரப்பு சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், அதனால், அவர் விரைவில் அக்கட்சியில் இணைவார் என்றும் அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, பாஜக தேசிய துணைத் தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு வர இருப்பதாக செய்தி வெளியான நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நயினார் நாகேந்திரன்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ஆட்டம் இப்போதே களைக்கட்டத் தொடங்கியுள்ளது.
No comments yet