0 Comments
Published on: Friday, January 3rd, 2020 at 10:51 PM
தமிழக அரசியல் களத்தில் காணாமல் போய்விட்டதாக கருதப்பட்ட தேமுதிக, நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 94 ஒன்றியங்களில் வெற்றி பெற்று, ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் ஐந்தாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
விஜயகாந்த் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். அவரால் பேச முடியவில்லை… அவருக்கு இருந்த மவுசு போய்விட்டது… தேமுதிக தேய்பிறையாகி விட்டது என பலர் கூறிவந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வென்று தனது இருப்பை வெளிப்படுத்தியுள்ளது தேமுதிக.
நடிகர் விஜயகாந்த் என்ற ஒற்றை ஆளுமையை வைத்து 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிகவுக்கு, 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரும் ஆதரவை கொடுத்தனர். அதன் வெளிப்பாடாக, அதிமுக, திமுக என இருபெரும் கட்சிகளுக்கு எதிராக தனித்து களம் கண்ட தேமுதிக அந்த தேர்தலில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 10 சதவீத வாக்குகளை பெற்ற தேமுதிக, 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது.
அந்த தேர்தலில் 26 இடங்களில் தேமுதிக வெற்றிபெற்றதால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்ற விஜயகாந்த், 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என எடுத்த முடிவு, தேமுதிகவுக்கு சரிவை கொடுத்தது. அப்போது, விஜயகாந்த் சரியான முடிவை எடுத்திருந்தால், இன்றைய தேதியில் ஒருவேளை திமுகதான் ஆளுங்கட்சியாக இருந்திருக்கும். ஏனெனில், திமுக கூட்டணி 1.1% வாக்கு வித்தியாசத்தில்தான் ஆட்சி வாய்ப்பை பறிகொடுத்தது. அந்த வாக்கை மக்கள் நலக் கூட்டணிதான் பிரித்து வைத்திருந்தது.
மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததால், சேர்த்து வைத்த மொத்த வாக்கு சதவீதத்தையும் தேமுதிக இழந்து தடுமாறிய நிலையில், விஜயகாந்தின் உடல்நலமும் மோசமாகிவிட்டது. ஒற்றை ஆளுமையான விஜயகாந்தை மட்டுமே நம்பியிருந்த தேமுதிகவுக்கு அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் அடிமேல் அடி விழுந்தது.
இனி தேமுதிக காணாமல் போய்விடும் என்ற பலரும் நினைத்த நிலையில், அதை பொய்யாக்கியுள்ளது ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். ஆம்..! இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் களமிறங்கிய தேமுதிக, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 94 இடங்களில் வென்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் 5வது பெரிய கட்சியாக தேமுதிம மீண்டும் உருவெடுத்துள்ளது. இந்த இடத்தை தக்கவைக்க, தேமுதிக தொடர்ந்து முயற்சிக்குமா?
No comments yet