0 Comments
Published on: Friday, May 15th, 2020 at 6:19 PM
உருமாறும் கொரோனா வைரஸ் – ஆராய்ச்சிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்…
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகள் துரிதமாக நடந்து வந்தாலும், அதிலிருந்து தப்பிக்கும் வகையில் கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
மனிதர்களின் வாய், மூக்கு மற்றும் கண்களின் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ், ஸ்பைக் என்று அழைக்கப்படும் கொக்கி போன்ற புரதத்தின் மூலம் மனித செல்களோடு இணைகிறது. இந்த இணைவு வெற்றிகரமாக நடந்தவுடன், வைரஸ் தனது மரபணுவை மனித செல்களுக்குள் புகுத்தும்.
மனித செல்களுக்குள் நுழையும், கொரோனாவின் மரபணு, அந்த செல்லை வைரசின் இனப்பெருக்கம் செய்வதற்கான இடமாக மாற்றுவதால், அதன்பின்னர் பாதிக்கப்பட்ட செல், ஒரு வைரசாகவே மாறி, பல்கிப்பெருகிறது.
பொதுவாக வைரசுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பு மருந்து, வைரசின் ஸ்பைக் புரதம் எதுவென்று கண்டுபிடித்து விடுகிறது. அதனால், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலுக்குள் வைரஸ் நுழையும் போது ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு, மனித செல்கள் அதனுடன் இணைவதை தவிர்க்கின்றன. ஆனால், கொரோனா வைரசின் இந்த ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வதாக தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும், 62 நாடுகளில் 5,349 கொரோனா மாதிரிகளை சோதனை செய்த விஞ்ஞானிகள் அதன் மரபணுவில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும், இதன் காரணமாக ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தின் தற்போதைய வடிவத்தின் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வது, அந்த தடுப்பு மருந்துகளை பயனற்றதாக மாற்றி விடும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனால், உருமாற்றம் நடைபெறாத வைரஸ்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் நிலை ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, தடுப்பு மருந்துகள் தயாரிப்பவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனோ வைரசில் ஏற்படும் மரபணு மாற்றங்களையும் கருத்தில்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு தொகுப்பாக பிரித்துள்ளனர். அதில் ஒரு தொகுப்பில் உள்ள 788 வகையான வைரசிலும் மற்றொரு தொகுப்பில் 32 வைரசிலும் இந்த உருமாற்றம் நிகழ்ந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் இந்த கருத்தை பார்க்கும்போது, மத்திய அரசு சொன்னதுபோல, கொரோனா வைரசோடு வாழ்ந்து பழகிக் கொள்ள வேண்டும் போல…
No comments yet