0 Comments
Published on: Friday, May 29th, 2020 at 5:51 PM
கொரோனா நோயாளிகள் 2 பேர் தப்பியோட்டம் – அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களால் அதிர்ச்சி…
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஒரே நாளில் 2 கொரோனா நோயாளிகள் தப்பியோடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வருவதால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்துரார் பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலரும் தீவிர சிகிச்சைக்குப் பிறகு நலமடைந்து வீடு திரும்பும் நிலையில், ஒரு சிலர் அச்சத்தின் காரணமாக மருத்துவமனையில் இருந்து தப்பியோடுவதும் தொடர்கதை ஆகியுள்ளது. இந்த வகையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், சேத்துப்பட்டை சேர்ந்த 63 வயது ஆண் நோயாளி கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இன்று காலை திடீரென தப்பியோடி விட்டார். அவரை தேடி வரும் நிலையில், பிற்பகலில் பல்லாவரத்தைச் சேர்ந்த 57 வயதான மற்றொரு ஆண் கொரோனா நோயாளியும் தப்பியோடி விட்டார்.
இது தொடர்பான புகாரில் இருவரையும் போலீசார் தேடி வரும் நிலையில், கொரோனா நோயாளிகள் வெளியில் சுற்றினால் பலருக்கும் தொற்று பரவும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இருவரையும் உடனடியாக பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ்
tamilxpressnews.com
No comments yet