0 Comments
Published on: Thursday, August 20th, 2020 at 10:44 PM
கொரோனா கொள்ளை… டிரண்ட் ஆன புது டெக்னிக்… சொந்த ஊர் சென்றவரா நீங்கள்?!
கொரோனா அச்சத்தால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்களின் வீடுகளை குறிவைத்து நடந்துள்ள தொடர் கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் சீனிவாசன் நகர் ஒன்றாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் செந்தில்நாதன். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் சொந்த ஊரான அரியலூருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். நீண்ட நாட்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பவர்கள் செந்தில்நாதன் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
செந்தில்நாதன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அருகில் வசிப்பவர்கள் மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். செந்தில்நாதனுக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே நிற்க வைத்திருந்த கார், வீட்டினுள் இருந்த 2 லேப்டாப், 17 சவரன் தங்க நகை ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
வீட்டில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது இரு இளைஞர்கள் கொள்ளையில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். செந்தில்நாதன் புகாரில், மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து கொள்ளையர்களை தேடினர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதி வரை சுமார் 166 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், ஆயிரம் விளக்கு பகுதியில் பதுங்கியிருந்து சதீஷ், சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைதான இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோதுதான், இதேபோல பல வீடுகளில் இருவரும் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இதேபோல் முன்னரே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதும், அதனால் பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.
சிறையில் இருந்த இருவரும் கொரோனா காலத்தில் வெளியே வந்து மீண்டும் கைவரிசை காட்டத் தொடங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து செந்தில்நாதன் வீட்டில் கொள்ளையடித்த 2 கார், 2 லேப்டாப், 17 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கொரோனா அச்சத்தால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களின் வீடுகளில் இதுபோன்ற கொள்ளைகள் சென்னையில் சாதாரணமாக நடப்பதாக கூறியிருக்கும் போலீசார், சொந்த ஊர் சென்றவர்கள், தங்கள் வீடுகளில் கொள்ளை போயிருப்பது தெரியவந்தால் உடனடியாக காவல்நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
No comments yet